கோலாலம்பூர்: மலேசியப் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பிலிருந்து திரு ஆன்டனி லோக் விலகிக்கொண்டது, கொள்கைகளைத் தொடர்வதிலும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுக் கணக்குகள் ஆணையம் (பிஏசி) கவலை தெரிவித்துள்ளது.
அரசியல் தலைமைத்துவத்தில் இடம்பெறும் மாற்றங்கள் ஆளுமைக்கும் முக்கியப் போக்குவரத்துத் திட்டங்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது என்று பிஏசி எச்சரித்துள்ளது. அரசியல் மாற்றங்கள், முடிவெடுக்கும் நடைமுறைகளை முடக்கக்கூடாது என்று குறிப்பிட்ட பிஏசி தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுதின், மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) நிறுவனம் தனியார் நிறுவனமாக மாற்றப்பட்ட பிறகு அதன் செயல்பாட்டு உருமாற்ற நடவடிக்கைகளை மெதுவடையச் செய்யக்கூடாது என்றும் பெரிய அளவிலான திட்டங்களைத் தீர்மானிக்கப்பட்ட காலத்தில் முடிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் சுட்டினார்,
“எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆளுமை இடம்பெறுவதைத் தலைமைத்துவ அதிகாரி என்ற பொறுப்பில் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர், அமைச்சரவையுடன் இணைந்து செயல்பட்டு உறுதிசெய்யவேண்டும்,” என்று திருவாட்டி மாஸ் எர்மியாத்தி திங்கட்கிழமை (நவம்பர் 16) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
வீட்டுக்காவலில் நஜிப்; லோக் பதவி விலகல்
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக்காவலில் இருந்து நிறைவேற்றலாம் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து டிஏபி கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு லோக் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) போக்குவரத்து அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாகப் பதவி விலகினார்.
கூடுதல் கவலை
மேலும், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் (ஏகேபிஎஸ்) தலைவராக முகம்மது சுஹைலி முகம்மது ஸெய்ன் இருந்துவந்த காலம் முடிவுக்கு வந்ததையடுத்து நாட்டின் விமான நிலையங்களில் அமலாக்க நடவடிக்கைகள் குறித்து பிஏசி கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில், மில்லியன்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள்களைக் கோலாலம்பூர் விமான நிலையம்வழியாகக் கடத்திவருவது போன்ற எல்லை தாண்டிய கடத்தல் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய திருவாட்டி மாஸ் எர்மியாத்தி, தலைமைத்துவத்தில் வெற்றிடம் இருப்பது ஏற்றுக்கொள்ளப்படாது என்று எச்சரித்தார்.
ஏகேபிஎஸ் தலைவராக திரு சுஹைலி பொறுப்பு வகித்த காலம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாகவும் அவர் மறுபடியும் மலேசிய அரசக் காவல்துறைக்குத் திரும்புவார் என்றும் மலேசிய உள்துறை அமைச்சர் சஃபுதின் நசுட்டியோன் இஸ்மாயில் கடந்த அக்டோபர் மாதக் கடைசியில் அறிவித்தார்.
