ஜகார்த்தா: இந்தோனீசிய விமான நிலையங்களில் குடி நுழைவு நடைமுறையை நிறைவுசெய்ய பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அமைப்புகள் சிலவற்றின் கணினிக் கட்டமைப்புகளில் ஏற்பட்ட இடையூறே இதற்குக் காரணம்.
வெளிநாடு செல்லும் விமானப் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வரும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான தரவுகள் தொடர்பான விவகாரத்தால் விமான நிலையங்களில் சேவை இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஜூன் 20ஆம் தேதி இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தாளில் தங்கள் விவரங்களைக் கைப்பட எழுதிக்கொண்டதாகவும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேர்ந்ததாகவும் பயணிகள் கூறினர்.
ஜூன் 20ஆம் தேதி மாலை 6 மணியளவில், தேசிய தரவு நிலையக் கணினிக் கட்டமைப்பில் தற்காலிக இடையூறு ஏற்பட்டதாக இந்தோனீசியக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநரகம் இன்ஸ்டகிராமில் பதிவிட்டது.
இந்தோனீசிய தொடர்பு, தகவல் அமைச்சு நிர்வகிக்கும் இந்தக் கணினிக் கட்டமைப்பில் அந்நாட்டு அரசாங்கச் சேவைகள் செயல்படத் தேவையான தரவுகள் இடம்பெற்றுள்ளன.
சேவைகள் மெதுவடைந்துள்ளதால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பயணிகள் நாட்டின் எல்லைகளைக் கடந்து சென்றுவருவதில் பிரச்சினை இல்லை என்றும் ஆனால் கணினி உதவியின்றி அதிகாரிகளே குடிநுழைவுச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் நீண்ட நேரமாவதாகவும் இந்தோனீசியக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் சில்மி கரிம் கூறினார்.
கணினிக் கட்டமைப்பு வழக்கநிலைக்குத் திரும்பும்வரை இந்த இடையூறு நீடிக்கும் என்றார் அவர்.
இந்தோனீசிய தொடர்பு, தகவல் அமைச்சர் புடி அரி செடியாடி, பொதுச் சேவையை மீட்டெடுக்கும் பணி கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படுவதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.
சேவைத் தடைக்கான காரணம் உட்பட இந்த இடையூறு குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஜூன் 21ஆம் தேதி காலை நிலைமை மேம்பட்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

