பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் டிக்டாக் சமூக ஊடகத்தளப் பிரபலமான ‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட 29 வயது ஏ. ராஜேஸ்வரியை இணையம்வழி துன்புறுத்திய லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை 40 வயது பி. சதீஷ்குமார் ஒப்புக்கொண்டார்.
டிக்டாக் சமூக ஊடகத்தளம் வாயிலாகத் தாம் துன்புறுத்தப்படுவதாக ராஜேஸ்வரி ஜூலை 4ஆம் தேதியன்று காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, மறுநாள் அவர் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தமது வீட்டில் மாண்டு கிடந்தார்.
அவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சதீஷ்குமார் ஜூலை 10ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
அவரது தண்டனைக்காலம் அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி தீர்ப்பளித்ததற்கு முன்பு மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான சதீஷ்குமார் தாம் தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொண்டு, இனி அவ்வாறு செய்யமாட்டேன் என்று உறுதி அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் தவறு செய்துவிட்டேன். இனி அவ்வாறு செய்யமாட்டேன். நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று சதீஷ்குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
டிக்டோக் தளம் வாயிலாக மற்றவரின் மனத்தைப் புண்படுத்தும் நோக்கில் ஆபாசமான, முறையற்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாக சதீஷ்குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தக் குற்றத்தை அவர் ஜூன் மாதம் 30ஆம் தேதி இரவு 10.12 மணி அளவில் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ராஜேஸ்வரியின் தாயாரான 56 வயது ஆர். புஷ்பாவையும் அவர் இகழ்ந்து பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சதீஷ்குமார் புரிந்த குற்றம் மிகவும் கடுமையானது என்றும் பாதிக்கப்பட்டவரின் உரிமைகளைக் கருதி அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அரசாங்க வழக்கறிஞர் வாதிட்டார்.
சதீஷ்குமாருக்கு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.
சதீஷ்குமாரின் மாதச் சம்பளம் 1,200 ரிங்கிட் மட்டுமே என்றும் உடற்குறையுள்ள மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அவர் பார்த்துக்கொள்கிறார் என்றும் குறிப்பிட்ட தற்காப்பு வழக்கறிஞர், சதீஷ்குமாருக்குக் கருணை காட்டும்படி கேட்டுக்கொண்டார்.

