பேங்காக்: தாய்லாந்து தலைநகரில் சாலை ஒன்றில் திடீரெனப் புதைகுழி தோன்றி, லாரி ஒன்றை நிலைதடுமாற வைத்த சம்பவம் அந்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை காலை ஏறத்தாழ 6:30 மணிக்கு, ‘இரண்டாம் ராமா’ (Rama II) சாலையின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியதாகச் (Caved in) ‘சமுட் சகோன்’ செய்தித்தளம் தெரிவித்தது. அந்தப் புதைகுழியின் அளவு லாரியின் அகலத்திற்கு ஈடாக இருந்தது.
புதைகுழி தோன்றிய நேரத்தில் அந்தச் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி, அதன் உள்ளே முன்னோக்கி விழுந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
அந்த வாகனம் கடும் சேதமுற்றதாகத் தொடக்கக்கட்ட அறிக்கைகள் கூறுகின்றன. மீட்புப் பணியாளர்களும் அவசரச் சேவையாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்ட சாலைப்பகுதி உடனடியாக மூடப்பட்டது. சாலைக்குக் கீழே வெடித்த தண்ணீர்க்குழாய் இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், நீர் அடைப்பான்கள் அடைக்கப்பட்டன.
‘பிக் சி’ கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள அந்தச் சாலைப்பகுதியைத் தவிர்க்கும்படி வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்கிறது.

