பேங்காக்: மின்னிலக்க லாட்டரி சீட்டுகளில் இழந்த பணத்தை ஓய்வூதியச் சேமிப்பாக மாற்றிக்கொள்வதற்கான புதிய கொள்கையைத் தாய்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
புதிய கொள்கையை லாப வருவாய் என்று வர்ணித்த அரசாங்கம், அதிகரிக்கும் மூப்படையும் சமூகத்துக்கு இடையே சிக்கனப் போக்கை ஊக்குவிக்க முற்படுகிறது.
புதிய திட்டத்தை உறுதிபடுத்திய தாய்லாந்துத் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு எக்னிட்டி நிட்டிதன்பிரபாஸ், திட்டத்தின் நிபந்தனைகளை முடிவு செய்யும்படி நிரந்தரச் செயலாளரிடம் உத்தரவிட்டார்.
புதிய திட்டம் அடுத்த சில மாதங்களுக்குள் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டத்தின்கீழ் வெற்றிபெறாத மின்னிலக்க லாட்டரி சீட்டுகளின் பரிசுத்தொகை தானாக சிறப்பு சேமிப்புக் கணக்குக்கு மாற்றிவிடப்படும்.
அந்த லாட்டரி சேமிப்புத் திட்டத்துக்கு இன்னும் அதிகாரபூர்வ பெயர் வைக்கப்படவில்லை. அது தேசிய சேமிப்பு நிதியால் செயல்படுத்தப்படும் லாட்டர் ஓய்வூதியத்தைவிட முற்றிலும் வித்தியாசமானது என்று திரு எக்னிட்டி சொன்னார்.
56 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோர் கூடுதலாக ஐந்தாண்டுக்குச் சேமிக்க முடியும். அவ்வாறு சேரும் நிதி, கடன் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படலாம்.
அரசாங்கம் முழுக்க முழுக்க சேமிப்பை இலக்காகக் கொண்டு புதிய திட்டத்தை அறிவித்துள்ளதே தவிர சூதாட்டத்தை அதிகரிக்க அல்ல என்று தாய்லாந்து நிதியமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு லவரோன் சங்சிட் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, ‘பாவ் டாங்’ என்ற மின்னிலக்கச் செயலி மூலம் வாங்கப்படும் லட்டாரிச் சீட்டுகளுக்கு மட்டுமே புதிய திட்டம் பொருந்தும். செயலியில் உள்ள உள்கட்டமைப்பு லாட்டரிச் சீட்டு வாங்குவோரைத் துல்லியமாக அடையாளம் கண்டு அத்தகையோரின் சேமிப்புக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்பிவிடும்.