பாதிக்கும் மேல் கட்டணங்களைக் குறைத்த தாய்லாந்து சொகுசு ஹோட்டல்கள்

பாதிக்கும் மேல் கட்டணங்களைக் குறைத்த தாய்லாந்து சொகுசு ஹோட்டல்கள்

2 mins read
c379a829-f497-4669-9aa8-47551a7871b6
தாய்லாந்தில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் கட்டணக் கழிவுகளை அறிவித்துள்ளன. - படம்: சுக்கோத்தாய் பேங்காக்
தாய்லாந்தில் உள்ள பான்யான் ட்ரீ ஹோட்டல்.
தாய்லாந்தில் உள்ள பான்யான் ட்ரீ ஹோட்டல். - படம்: பான்யான் ட்ரீ

தாய்லாந்து: பேங்காக்கின் கரையோர ஹோட்டல்களிலிருந்து அந்தமான் கடற்கரை ஹோட்டல்கள் வரை தாய்லாந்தில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் அனைத்தும் கட்டணங்களை வெகுவாகக் குறைத்துள்ளன.

மத்திய கிழக்குப் பூசலால் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டதால் தாய்லாந்துக்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகச் சரிந்துள்ளது.

எனவே, உள்ளூர்வாசிகளை வசப்படுத்த சொகுசு ஹோட்டல்கள் அனைத்தும் கட்டணங்களில் 70 விழுக்காடு வரை கழிவுகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.

மெண்டரின் ஓரியென்டல் போன்ற பேங்காக்கின் ஆகப் பழைய கடற்கரையோர ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஓர் இரவு தங்குவதற்கான சராசரி கட்டணம் $1,000 டாலர் வரை இருக்கும். இப்போது அங்கு ஓர் இரவு தங்க $300 கட்டணம் செலுத்தினால் போதும்.

முன்பு தென்னந்தோப்பாக இருந்த இடத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி ரெயிலே பீச் ஹோட்டல், தற்போது 50 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்குகிறது. $450 டாலர் கட்டினால் அங்கு ஓர் இரவு தங்கிக்கொள்ளலாம்.

ஈரான் போரால் ஐரோப்பாவிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் வரும் வழக்கமான சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 16 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

தாய்லாந்தின் பொருளியலில் ஐந்தில் ஒரு பங்கு சுற்றுலாத் துறையைச் சார்ந்திருக்கிறது. கொவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பிறகு பலத்த அடிவாங்கிய தாய்லாந்தின் சுற்றுலாத் துறை படிப்படியாக மீண்டுவரும் நிலையில் தற்போது மத்திய கிழக்குப் பூசல் பின்னடைவை அளித்துள்ளது.

தாய்லாந்தின் சுற்றுலாத் துறை இவ்வாண்டு 37 மில்லியன் வெளிநாட்டினரை வரவேற்கத் திட்டமிட்டிருந்தது. அது கடந்த ஆண்டைவிட 11 விழுக்காடு அதிகம்.

தற்போது அந்த இலக்கைத் தாய்லாந்து எட்டுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

மார்ச் நடுப்பகுதிவரை கிட்டத்தட்ட 7.9 மில்லியன் சுற்றுப்பயணிகள் தாய்லாந்து சென்றுள்ளனர். பெரும்பாலான சுற்றுப்பயணிகள் சீனா, மலேசியா, ர‌ஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சென்றனர்.

அதிகரிக்கும் எண்ணெய் விலை சுற்றுலாத் துறையை மேலும் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தாய்லாந்து அஞ்சுகிறது.

குறிப்புச் சொற்கள்