தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் ஊழல் குற்றம் புரிந்ததாக நம்பப்படும் சிங்கப்பூரர் கைது

2 mins read
12a2aee6-0c4c-4387-bc42-927270e1cacc
ஆறு நாள் தடுப்புக்காவல் உத்தரவுக்காக புத்ராஜெயா நீதிமன்றத்துக்கு சிங்கப்பூரர் கொண்டுசெல்லப்பட்டார். - படம்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

பெட்டாலிங் ஜெயா: வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை அனுமதிக்க அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 24) மாலை 5 மணியளவில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

“முதற்கட்ட விசாரணையில் 2022ஆம் ஆண்டிலிருந்து சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு பணம் ரொக்கமாக வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது,” என்று தகவல் தெரிவித்தவர் கூறினார்.

“இதில் 11 அமலாக்க அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.”

சிங்கப்பூரரைத் தடுத்து வைப்பதற்கான ஆணையத்தின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 23) காலாவதியாகும்.

ஆணையத்தின் விசாரணைப் பிரிவு மூத்த இயக்குநர் ஹிஷாமுதீன் ஹஷிம், கைதை உறுதிப்படுத்தியதுடன், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

கிள்ளான் துறைமுகத்தில் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்படுபவராக சிங்கப்பூரர் ஒருவரை ஆணையம் அடையாளம் கண்டதாகவும், அக்கடத்தல் மூலம் கிட்டத்தட்ட $3.5 பில்லியன் ரிங்கிட் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஆணையத்தின் விசாரணையின் ஒரு பகுதியாக 11 சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அதிகாரிகளிடமிருந்து லஞ்சமாகப் பெறப்பட்டதாக நம்பப்படும் 4.4 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது. ஆணையம் கைது செய்த 17 பேரில் அந்த 11 அதிகாரிகளும் அடங்குவர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் சுங்கத் துறையும் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள், வாகனப் பாகங்கள், சூரியசக்தித் தகடுகள் போன்ற பொருள்கள் அடங்கிய 19 கொள்கலன்கள் கிள்ளான் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

கடத்தல் கும்பல் கொள்கலன்களின் உள்ள பொருள்களை சக்கர நாற்காலி, கழிப்பறை இருக்கைகள், துணிமணி, சுகாதார உபகரணங்கள் போன்ற தீர்வையற்ற பொருள்களாக அறிவித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்