பெய்ஜிங்: சீனாவில் யாரும் எதிர்பார்க்காத அளவில் தமிழ்த் திரைப்படமான ‘மகாராஜா’ வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
கடந்த நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் வெளியான அந்தப் படத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இரண்டு வாரத்தில் மட்டும் அந்தப் படம் கிட்டத்தட்ட 10 மில்லியன் வெள்ளி வசூல் செய்துள்ளது. இந்தியாவிலும் 100 கோடி ரூபாய்க்கு மேலாக ‘மகாராஜா’ வசூலித்தது.
சீனாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் தயாரிப்பில் உருவான திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
அதன் பிறகு இந்தியத் திரைப்படங்கள் சீனாவில் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட்டு வருகிறது. எல்லையில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பூசலை பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் அண்மையில் சரிசெய்தன.
அதனால் மீண்டும் இந்தியத் திரைப்படங்கள் சீனாவில் திரையிடப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியத் திரைப்படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளதை இது எடுத்துக்காட்டுவதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அதனால் வரும் நாள்களில் பல இந்தியப் படங்கள் சீனாவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

