தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாதீரின் மகன்களது மொத்த சொத்து மதிப்பு $365 மில்லியன்

2 mins read
0f6553f8-a28a-464a-8a85-809bccaeaba9
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது. - படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தொடர்பாக அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இதனை முன்னிட்டு டாக்டர் மகாதீரின் இரு மகன்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதன்மூலம் அவர்கள் இருவரின் மொத்த சொத்து மதிப்பு 1.2 பில்லியன் ரிங்கிட்டுக்கும் (S$365 மில்லியன்) அதிகம் என்று தெரியவந்துள்ளது.

1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்து தமக்கு இருப்பதாக திரு மொக்சானி மகாதீர் தெரிவித்துள்ளார்.

அதில் திரு மொக்சானியின் தனிப்பட்ட சொத்துகளின் மதிப்பு 360 மில்லியன் ரிங்கிட்.

அவரது அண்ணணான திரு மிர்சான் மகாதீருக்கு 246 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்து இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் திரு அஸாம் பாக்கி செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 21) கூறினார்.

திரு மிர்சானின் தனிப்பட்ட சொத்துகளின் மதிப்பு 120 மில்லியன் ரிங்கிட்.

“இருவரும் அவர்களது சொத்து மதிப்பை தெரிவித்துவிட்டனர். அதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது,” என்றார் திரு அஸாம்.

இருப்பினும், மகாதீரின் இரு மகன்களுக்கும் எதிராகச் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாது என்று கூறிவிட முடியாது என்று திரு அஸாம் கூறினார்.

“விசாரணை தொடர்கிறது. இதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்,” என்று திரு அஸாம் தெரிவித்தார்.

1981ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தங்களுக்கு சொத்துகளின் விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி திரு மொக்சானியிடமும் திரு மிர்சானிடமும் உத்தரவிடப்பட்டது.

டாக்டர் மகாதீர் மலேசியப் பிரதமராக 1981ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார்.

தங்கள் தந்தையைக் குறிவைத்து இந்த விசாரணை நடத்தப்படுவதாக திரு மொக்சானியும் திரு மிர்சானும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த விசாரணை நடத்தப்படுவதாக டாக்டர் மகாதீர் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்