பெங்கெராங் (மலேசியா): ஜோகூரில் உள்ள புங்காய் பகுதியில் கொழுந்துவிட்டெரிந்த காட்டுத்தீயைத் தீயணைப்பாளர்கள் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதியின் 85 விழுக்காட்டுப் பகுதியில் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டுவிட்டது. பல நாள்களாக எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்கத் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவுத் தலைவர் சிட்டி ரொஹானி நாடிர் கூறினார்.
இரண்டு இடங்களில் தீ எரிந்துகொண்டிருந்ததாக திருவாட்டி சிட்டி ரொஹானி சொன்னார்.
அவற்றில் ஒரு பகுதி ஜாலான் பைப்பாஸ் புங்கை-செபானா கோவ் என்றும் அங்கு இம்மாதம் 21ஆம் தேதி தீ மூண்டதாகவும் அவர் தெரிவித்தார். ஏறத்தாழ 150 ஹெக்டர் நிலப்பகுதி பாதிக்கப்பட்டது.
பிபிஆர் எனப்படும் பெங்கெராங் மக்கள் வீடமைப்புத் திட்டம் பாதிக்கப்பட்ட மற்றொரு பகுதியாகும். அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) கிட்டத்தட்ட 10 ஹெக்டர் பரப்பளவிலான நிலப்பகுதியில் தீ மூண்டதாகவும் அவர் வியாழக்கிழமை (மார்ச் 26) சொன்னார்.
மொத்தம் 35 தீயணைப்பாளர்களும் காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை போன்ற அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக திருவாட்டி சிட்டி ரொஹானி குறிப்பிட்டார்.
ஜாலான் பைப்பாஸ் புங்கை-செபானா கோவ் பகுதியில் 127.5 ஹெக்டர் நிலப்பகுதியில் தீ அணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

