கோலாலம்பூர்: மலேசியாவில் குறைந்தது எட்டு மில்லியன்பயனர்களையும் கொண்ட சமூக ஊடகம் மற்றும் இணையத் தகவல் பரிமாற்றுத் தளங்கள் இப்போது நாட்டின் தகவல் தொடர்புச் சட்டங்களின்கீழ் உரிமம் பெற்றவையாகக் கருதப்படுகின்றன.
இதன்மூலம் அவை அதிகாரபூர்வமாக உள்ளூர் ஒழுங்குமுறை மேற்பார்வையின்கீழ் கொண்டுவரப்படுவதாக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
2026 ஜனவரி 1 முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப், யூடியூப், டெலிகிராம், டிக்டாக் போன்ற தளங்கள் அனைத்தும் சேவை வழங்குநர் (Class Application Service Provider) உரிமம் பெற்றவையாகக் கொள்ளப்படும்.
உரிமம் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் (MCMC) விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சமூகத்தின், குறிப்பாக குழந்தைகள், குடும்பங்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்த இணையத் தகவல், சமூக ஊடகச் சேவை வழங்குநர்களுடனும் மற்ற அமலாக்க நிறுவனங்களுடனும் மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் தொடர்ந்து பணியாற்றும் என்றார் அவர்.
2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2026 ஜனவரி 15 வரை, மொத்தம் 5,409 போலியான அல்லது மாற்றியமைக்கப்பட்ட படங்களை அகற்ற செய்தி வழங்குநர்களிடம் ஆணையம் கூறியது. அதில் 4,955 அதாவது, 92% அகற்றப்பட்டதாக திரு ஃபஹ்மி கூறினார். பொய்த் தகவல் காரணமாக 59,967 உள்ளடக்கள் நீக்கச் சொல்லப்பட்டன. அதில், 51,912 (87%) நீக்கப்பட்டன என்று திரு ஃபஹ்மி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

