கோலாலம்பூர்: மலேசியாவின் தமிழ்மொழி நாளிதழான மக்கள் ஓசையின் மூத்த ஆசிரியரான டாக்டர் ராஜன் பூபாலன் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) அதிகாலை 4 மணியளவில் சிலாயாங் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68.
டாக்டர் ராஜன் பூபாலன் செய்தித் துறையில் ஏறத்தாழ 45 ஆண்டுகள் நீண்ட அனுபவம் கொண்டவர் என்றும் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் ஓசை தமிழ் நாளிதழில் மூத்த ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் என்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், மக்கள் ஓசை நாளிதழில் இணைவதற்கு முன்பாகவே அவர் வேறொரு நாளிதழிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் என்பதையும் அவர் சுட்டினார்.
“அவர் மிகவும் கனிவான குணம் கொண்டவர். அனைவரிடமும் நட்புணர்வுடன் பழகக்கூடியவர். அரசியல் தலைவர்கள் உட்படப் பல முக்கியப் பிரமுகர்களுடன் சிறந்த நல்லுறவைக் கொண்டிருந்தார். ஆங்கிலம், மலாய் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளுக்கிடையே சிறந்த மொழிபெயர்ப்புத் திறனையும் கொண்டிருந்தவர்,” என்றுபெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசிய திரு கோபாலகிருஷ்ணன் கூறினார்.
உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட உடல்நலச் சிக்கல்களுக்காக டாக்டர் ராஜன் சிலாயாங் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி தமது வீட்டின் குளியலறையில் டாக்டர் ராஜன் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், அவரது மூளையின் ரத்தக்குழாய் ஒன்று வெடித்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மூளையில் உறைந்திருந்த ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தார்.
மறைந்த டாக்டர் ராஜன் பூபாலனுக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
