பெட்டாலிங் ஜெயா: மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலாய் மெயில் உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.
மலாக்கா மாநிலத்தில் சனிக்கிழமை (நவம்பர் 14) நடந்த சட்டமன்றத் தேர்தலில் மாலை 5.25 மணி நிலவரப்படி 469,249 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்திவிட்டனர்.
அந்த எண்ணிக்கை மலேசியத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த 70 விழுக்காட்டு இலக்கை எட்டிவிட்டது என்று ஆணையம் உறுதிப்படுத்தியது.
ஆக அதிகமாக, அம்மாநிலத்தில் செர்காம் தொகுதியில் 79.33 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர். அத்தொகுதிக்குப் பிறகு ஆயர் மோலெக் தொகுதியில் 78.84 விழுக்காடும் தஞ்சோங் பிடாரா தொகுதியில் 76.14 விழுக்காடும் வாக்குகள் பதிவாயின.
பண்டார் ஹிலிர் தொகுதியில் ஆகக் குறைவாக 57.36 விழுக்காடு, கோத்தா லக்சமனா தொகுதியில் 62.41 விழுக்காடு, சுங்கை ஊடாங் தொகுதியில் 63.15 விழுக்காட்டு அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் புள்ளி விவரங்களை வழங்கியது.
கடந்த 2021ல் நடந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் 65.9 விழுக்காட்டு மக்களே வாக்களித்திருந்தனர்.
இவ்வாண்டு செப்டம்பர் 23ஆம் தேதி மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. மாநில அரசாங்கத்தில் இடம்பெற்ற பல கட்சியினருக்கும் கூட்டணிகளுக்கும் இடையில் உட்பூசல் ஏற்பட்டதால் சட்டமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் அனைத்து 28 தொகுதிகளிலும் தேர்தல் வாக்களிப்பு அன்றைய தினம் மாலை 6 மணிக்கு முடிவடையும். முதல் தொகுதிக்கான முடிவுகள் இரவு 9.30 மணியளவில் எதிர்பார்க்கப்படும் எனவும் முழுமையான முடிவுகள் நள்ளிரவு கடந்து 12.30 மணிக்கு கிடைக்கலாம் என்றும் தெரிகிறது.
மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 669,211 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
பாரிசான் நேஷனல் கூட்டணிக் கட்சி 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது. அது 28 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைவசம் வைத்திருந்து, திரு சுலைமான் அலியை இரண்டாம் முறையாக முதலமைச்சர் பதவியில் அமர வைத்தது.
உள்கட்சிப் பூசலால் திரு சுலைமான் 2023 ஏப்ரல் மாதம் பதவி விலகினார். அதன்பிறகு மலாக்கா அம்னோ கட்சியின் தலைவர் அப்துல் ராஹுஃப் யூசோ முதல்வர் பதவியை ஏற்று, பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியை அரசு நிர்வாகத்தில் இணைத்தார்.
ஆயினும் இவ்வாண்டு ஜூலை மாதம் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, மலாக்க மாநில ஆட்சியில் அதன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொண்டது. தேர்தல் இன்றி ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பதவி நியமனம் செய்யலாம் என அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து பக்கத்தான் அவ்வாறு வெளிநடப்பை மேற்கொண்டது.
இந்தத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அது ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்துள்ளது.
ஏழு தொகுதிகளில் போட்டியிடும் பெர்சத்து கட்சியுடன் இணைந்துள்ள பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
