மலாக்கா தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் முன்கூட்டியே வாக்களிப்பு

மலாக்கா தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் முன்கூட்டியே வாக்களிப்பு

படம்: பெர்னாமா

10 Nov 2026 - 5:30 pm

2 mins read

மலாக்கா: மலேசியாவின் 16வது மலாக்கா மாநிலத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நவம்பர் 10ஆம் தேதி அமைதியான முறையில் தொடங்கியது.

இந்த வாக்குப்பதிவில் 95 விழுக்காடு வாக்காளர் வருகையை அம்மாநிலத் தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது.

ராணுவத்தினர், காவல்துறையினர் உட்பட மொத்தம் 12,531 பேர் முன்கூட்டியே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதற்காக 31 வாக்களிப்பு நிலையங்களில் 50 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 10.35 மணி நிலவரப்படி, 5,286 பேர் அல்லது 53.25 விழுக்காட்டினர் வாக்களித்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அக்டோபர் 31ஆம் தேதி, தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் கொடிகள் எரிப்பு, மிரட்டல், தூண்டுதல், மோதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாகக் காவல்துறைக்குப் புகார்கள் வந்துள்ளன.

அதன் அடிப்படையில் 18 விசாரணைக் கோப்புகள் திறக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மலாக்கா மாநிலக் காவல்துறைத் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

அதேவேளையில் பிரசாரக் கொடிகள், விளம்பரப் பதாகைகள் அமைப்பதில் ஏற்பட்ட விதிமீறல்கள் தொடர்பாக 237 புகார்கள் கிடைத்துள்ளதாக அம்மாநிலத் தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருன் கூறினார்.

களத்தில் 79 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேர்தல் பிரசாரம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுமுகமாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நாளன்று பாதுகாப்புப் பணியில் 3,332 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்காளர்களை அச்சுறுத்தவோ அல்லது வற்புறுத்தவோ கூடாது என அரசியல் கட்சிகளுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்