மலாக்கா: ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை மலேசிய ரிங்கிட் 1,700 ($533) என்றிலிருந்து மலேசிய ரிங்கிட் 2,500 ($783) ஆக உயர்த்துவதை மாநில அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அம்மாநில முதல்வர் அப் ரஹூஃப் யுசோ சனிக்கிழமை (செப்டம்பர் 5) கூறியுள்ளார்.
அவ்வாறு நடந்தால் மலேசிய மாநிலங்களில் அத்தகு மாற்றத்தை ஏற்படுத்திய முதல் மாநிலமாக மலாக்கா திகழும்.
பல கோணங்களில் அந்தப் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு பிறகு தலைநகரில் இயங்கும் கூட்டரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“அதனை நாங்கள் பல வடிவங்களில் ஆய்வு செய்து தேவையான மாற்றங்களைச் செய்து பிறகு அரசாங்கத்திடம் வழங்குவோம்,” என்று திரு ரஹூஃப் யுசோ இளையோர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் விளக்கமளித்தார்.
‘கார்னிவல் அனாக் மூடா’ என்ற பெயரில் அயர் கெரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் அந்நிகழ்வு நடந்தது.
வாழ்க்கைத் தொழில் வாய்ப்புகளை வழங்கி இளையோருக்கு உள்ளூரிலேயே எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள ஊக்கம் அளிக்கும் மலாக்கா மாநில அரசாங்கத்தின் முயற்சிகளின் ஓர் அங்கமாக அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநிலத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்துத் தெளிவான விளக்கமும் வழிகாட்டுதலும் இளையோர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இளம் தாய்களுக்கும் உதவி
மாநில அரசாங்கம் பெண்களுக்குக் குறிப்பாக இளம் தாய்மார்களுக்கு ஆதரவு நல்கும் வழிவகைகளையும் ஆராய்வதாகத் தெரிவித்தார். அவர்களில் மணவாழ்வு அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளால் வாழ்க்கைத் தொழில் பாதிக்கப்பட்டப் பெண்களும் அடங்குவர்.


