ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கடந்த 2025ஆம் ஆண்டில் மலேரியா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் 418,000 பேருக்கு தொற்றிய அந்நோய், 2024ஆம் ஆண்டில் 543,000 என்று ஏற்றம் கண்டது. கடந்த 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 706,000ஆக உயர்ந்தது.
மக்கள் இடம்பெயர்வு, பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் மலேரியா தொற்று அதிகம் பரவுவதாக இந்தோனீசிய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இயக்குநர் பிரைமா யோசபின் ஏப்ரல் 30ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 514 மாவட்டங்களில் 412 மாவட்டங்கள் மலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்டவை என்று அறிவிக்கப்பட்டாலும், இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக பாப்புவா மாகாணத்தில் தொற்று 95 விழுக்காடு பதிவாகியுள்ளது.
பாப்புவாவின் ஆறு மாநிலங்களில் பரவல் அதிகமாகியுள்ளது. பெரிய காடுகள் நிறைந்த பகுதியான பாப்புவாவில் மலேரியா ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. உள்கட்டமைப்புகள் அதிகம் இல்லாததால், அங்கு மருத்துவ உபகரணங்களை அனுப்புவதும் அங்குள்ள மக்களை அடைவதும் கடினமாக உள்ளது என்று திருவாட்டி பிரைமா தெரிவித்தார்.

