கோலாலம்பூர்: மலேசியாவில் இனி அனைத்துலக, தனியார், சமயப் பள்ளிகள் ஆகிய அனைத்திலும் மலாய் மொழி, வரலாற்றுப் பாடங்கள் கட்டாயமாகக் கற்பிக்கப்படவேண்டும்.
இதன்படி, யுஇசி எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வுச் சான்றிதழின் அடிப்படையில் இயங்கும் சீன சுயேச்சைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம்பிடிக்கும் வழிமுறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஇசி சான்றிதழ் பல காலமாக விவாதத்துக்கு உட்பட்டு வந்துள்ளது.
“இதன் மூலம் அனைத்துலக, சமயப் பள்ளி மாணவர்கள், யுஇசி சான்றிதழ் வைத்திருப்போர் என எல்லா வகை மாணவர்களும் உயர் கல்வி மேற்கொள்வதில் இனி எந்த சர்ச்சையும் இருக்காது. இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவர்,” என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) தெரிவித்தார். தேசியக் கல்வி, உயர் கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைத்தபோது அவர் பேசினார்.
சீன சுயேச்சைப் பள்ளிகளைப் பிரதிநிதிக்கும் டோங் ஸோங் எனும் சங்கம் 1975ஆம் ஆண்டு யுஇசி முறையை அறிமுகப்படுத்தியது. மலேசியாவில் சீன மொழிக் கல்விக் கட்டமைப்பைச் சீராக்க யுஇசி தொடங்கப்பட்டது.
பள்ளிகள் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில்தான் கல்வி கற்பிக்கவேண்டும் என்ற கல்விச் சட்டம் மலேசியாவில் 1961ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. புதிய விதிமுறையைக் கடைப்பிடிக்க விரும்பாத சீன உயர்நிலைப் பள்ளிகள் 1962ஆம் ஆண்டு சுயேச்சைப் பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டன. அதனால் அவை அரசாங்க நிதியுதவி பெறமுடியாமல் போனது. யுஇசி தொடங்கப்படும் வரை அப்பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும் அரசாங்கத் தேர்வு முறை என்பது இல்லாமல் இருந்தது.
தேசியத் தேர்வுகளுக்குத் தேவையான தேசியக் கல்விக் கட்டமைப்பின் உயர்நிலை, தொடக்கக் கல்லூரி பாடத் திட்டங்களைப் பின்பற்றாததால் யுஇசி சான்றிதழை மலேசிய மத்திய அரசாங்கம் பல காலமாக அங்கீகரிக்காமல் இருந்தது.
தேச வளர்ச்சியின் அடிப்படையாக எல்லா கல்வி முறைகளும் மலாய் மொழிக்கும் மலாய் வரலாற்றுக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் திங்கட்கிழமை (ஜனவரி 19) நாடாளுமன்றத்தில் தமது அரசு உரையின்போது குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

