கோலாலம்பூர்: இந்தியாவால் தேடப்பட்டுவந்த குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை மலேசியா நாடுகடத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டியாலா நகரில் ரயில் தண்டவாள வெடிப்பில் அவ்விருவருக்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. மலேசியக் காவல்துறை அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இருவரையும் அடையாளம் கண்டு தடுத்து வைக்குமாறு இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களை நாடுகடத்தியதாக புக்கிட் அமான் குற்றவியல் புலன்விசாரணைப் பிரிவு இயக்குநர் எம்.குமார் தெரிவித்தார். இது, வட்டாரப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மோசமான குற்றங்களை முறியடிப்பதில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நடவடிக்கை, அனைத்துலக அளவில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதேவேளையில் எல்லை தாண்டிய குற்றச்செயல்களை முறியடிப்பதில் மலேசியக் காவல்துறை தொடர்ந்து முனைவதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் சொன்னார். மேலும், குற்றவியல் நீதிக் கட்டமைப்பிலிருந்து தப்பிப்போருக்குப் பாதுகாப்பான இடமாக மலேசியா இருக்காது என்பதையும் இது தெளிவுபடுத்துவதாகத் திரு குமார் சுட்டினார்.
சந்தேக நபர்கள் இருவரும், பட்டியாலா மாவட்டத்தின் முக்கிய ரயில் பாதை ஒன்றைக் குறிவைத்த வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. இருவரும் ஏப்ரல் இறுதியில் மலேசியாவுக்குள் நுழைந்து கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒளிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

