கோலாலம்பூர்: மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் இவ்வாண்டில் மட்டும் மோசடி தொடர்பான 49,082 பதிவுகளை அகற்றியிருப்பதாகத் தொடர்பு துணை அமைச்சர் டியோ நை சிங் தெரிவித்துள்ளார்.
இது, ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையிலான நிலவரம்.
சென்ற ஆண்டில் 63,652 பதிவுகளும் அதற்கு முந்திய 2023ஆம் ஆண்டில் 6,297 பதிவுகளும் இணையத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
“போலிக் கணக்குகள், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிப் பதிவுகள் பரப்பப்படுவது கடந்த சில ஆண்டுகளில் அதிக அளவு உயர்ந்துவிட்டது,” என்றார் அவர்.
சரவாக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) நடந்த தொடர்பு அமைச்சின் உன்னத சேவை விருது விழாவில் உரையாற்றியபோது அவர் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்துச் செயல்படுமாறு அவர் அனைத்துத் தரப்பினர்க்கும் வேண்டுகோள் விடுத்தார்.
பல்வேறு பணிகளையும் அன்றாட வேலைகளையும் ஏஐ எளிதாக்கினாலும், முயற்சி, அர்ப்பணிப்பு, மேன்மையான சேவை போன்ற முக்கியமான விழுமியங்களை அதனால் மாற்ற இயலாது என்றும் அவையே பொதுச் சேவைக்கு அடித்தளம் என்றும் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
தொழில்நுட்பத்தை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
மோசடிகளையும் போலிச் செய்திகள் பரவுவதையும் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
அவ்வகையில், அய்ஃபா (AIFA) என்ற செயற்கை நுண்ணறிவு உண்மைச் சரிபார்ப்பு உதவியாளர் என்ற அளாவி (சேட்பாட்) இவ்வாண்டு ஜனவரி 28ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதல் ஜூலை 31ஆம் தேதிவரை, அந்த அளாவிக்கு நாளொன்றுக்குச் சராசரியாக 769 குறுஞ்செய்திகள் என்ற கணக்கில் 142,257 குறுஞ்செய்திகள் வந்துள்ளதாகத் திருவாட்டி டியோ தெரிவித்தார்.

