லங்காவி: மலேசியக் கடல்துறை, அந்தமான் கடற்பரப்பில் காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியிருக்கிறது.
மியன்மாரிலிருந்து ரெளஹிங்யா குடியேறிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 12க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. இந்தச் சம்பவத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ரெளஹிங்யா குடியேறிகளை ஏற்றிக் கொண்டு மியன்மாரிலிருந்து கப்பல் புறப்பட்டது. மலேசியாவை நோக்கி குடியேறிகளின் கப்பல் சென்றது. பின்னர் அவர்கள் பல குழுக்களாகச் சிறிய படகுகளுக்கு மாறியதாக மலேசியாவின் லங்காவி காவல்துறைத் தலைவர் கைருல் அஸார் நூருதீன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.
மியன்மாரில் சிறுபான்மையினரான ரெளஹிங்யாக்கள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு குடியுரிமைகூட வழங்கப்படவில்லை.
லங்காவி அருகே கடலில் மூழ்கிய படகில் ஏறக்குறைய 70 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. மேலும் 230 பயணிகளை ஏற்றிச்சென்ற மற்ற படகுகளின் நிலை குறித்து தெரியவில்லை என்று மலேசிய அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை 13 பேர் உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளனர். ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அண்டை நாடான தாய்லாந்தில் உள்ள அதிகாரிகள் நான்கு சடலங்களை மீட்டுள்ளனர். அவர்களில் இருவர் ரெளஹிங்யா பெண்கள் என்று அந்நாட்டின் கடல்துறை பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
“தாய்லாந்து கடற்படையும் தேடி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது,” என்று ராய்ட்டர்சிடம் தாய்லாந்தின் தெற்கு சாடுன் மாநிலத்தின் ஆளுநர் சக்ரா கபிலாகார்ன் தெரிவித்துள்ளார்.

