2035க்குள் கட்டுப்படியான விலையில் ஒரு மில்லியன் வீடுகள் கட்ட மலேசியா இலக்கு

2035க்குள் கட்டுப்படியான விலையில் ஒரு மில்லியன் வீடுகள் கட்ட மலேசியா இலக்கு

படம்: பெர்னாமா

10 Nov 2026 - 5:31 pm

2 mins read

கோலாலம்பூர்: மேம்படுத்தப்பட்ட கட்டுமானத் தொழில்நுட்பம் மூலம் மலேசியா 2030ஆம் ஆண்டுக்குள் 500,000 வீடுகளையும் 2035ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் கட்டுப்படியான விலை வீடுகளையும் கட்டி முடிக்க இலக்கு கொண்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) தெரிவித்தார்.

பாதுகாப்பு, தரம், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் எவ்விதச் சமரசமும் செய்துகொள்ளாமல் மிகத் திறம்படவும் குறைந்த செலவிலும் வீடுகளைக் கட்ட இந்தத் தொழில்நுட்பம் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இங்குள்ள மலேசிய அனைத்துலக வர்த்தக, கண்காட்சி மையத்தில் நடைபெற்ற அனைத்துலகக் கட்டுமான வாரம் மற்றும் பில்ட்எக்ஸ்போ மலேசியா 2026 நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் அன்வார், 13வது மலேசியத் திட்டத்தின்கீழ் 2030க்குள் 500,000 கட்டுப்படியான விலையிலான வீடுகளை வழங்குவதை ஓர் இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும்,இது 2035க்குள் ஒரு மில்லியன் வீடுகளை உருவாக்கும் நாட்டின் பெருந்திட்டத்தின் ஓர் அங்கம் என்றும் குறிப்பிட்டார்.

மலேசியாவில் தொகுதிசார் கட்டுமான முறையை மேம்படுத்த, முப்பரிமாண சிமெண்ட் பூச்சு அச்சிடும் முறை போன்ற நுட்பங்களை ஆராய்வது உட்பட, கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியமும் தனியார் துறையும் இணைந்து மேற்கொண்டுவரும் கூட்டு முயற்சிகளுக்கு அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இத்தகைய முயற்சிகள், மலேசியா வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், தனக்கெனச் சொந்தத் தொழில்நுட்ப ஆற்றல்களை வளர்த்தெடுக்க மிகவும் இன்றியமையாதவை என்றார் பிரதமர் அன்வார்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியானது பொதுமக்களின் தேவைகளிலிருந்து விலகிச் சென்றுவிடாமல் இருப்பதையும் இந்த உருமாற்றத்தின் பலன்கள் குறிப்பாக கட்டுப்படியான விலை வீடுகள் மூலம் சாதாரண மலேசியர்களுக்குச் சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்