பெட்டாலிங் ஜெயா: விமானப் பயணங்களுக்குப் பதிவுசெய்யும் பயணிகள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான விதிமுறைகளை மலேசிய ஏர்லைன்ஸ், ஏர்ஏஷியா விமான நிறுவனங்கள் இரண்டும் சீராக்கியுள்ளன.
மலேசிய கடப்பிதழ்களில் இடம்பெறும் பெயர்களைச் சரிவரப் பதிவிடவும் விமானத் துறை நடைமுறைகளுக்கு ஏற்ப அவை பதிவுசெய்யப்படுவதை உறுதிசெய்யவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பயணம் மேற்கொள்ளும்போது சிலர் கடப்பிதழில் இருப்பதற்கு சற்று மாறுபட்ட வடிவில் பெயர்களைப் பதிவுசெய்யக்கூடும். அதனால் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கையாள விதிமுறைகள் சீராக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், கடைசி பெயர்/குடும்பப் பெயர் (Last Name/Surname) நிரப்பவேண்டிய இடங்களில் ‘bin’, ‘binti’, ‘anak’ போன்ற பெயர்களில் இடம்பெறும் சொற்களை நிரப்பும் வழிமுறைகளை சுமுகமாக்க மலேசிய ஏர்லைன்சும் ஏர்ஏஷியாவும் இந்நடவடிக்கையை எடுக்கின்றன.
உதாரணமாக, அகமது ஃபாலிக் பின் ஹமேதி (Ahmad Faliq bin Hamedi) என்ற பெயரை, முதல் மற்றும் நடுப்பெயர் (Middle name) பகுதியில் அகமது ஃபாலிக் என்று நிரப்பவேண்டும். அதேவேளை கடைசி பெயர்/குடும்பப் பெயர் பகுதியில் பின் ஹமேதி என்று நிரப்பப்படவேண்டும்.
இதுகுறித்து மேல்விவரங்களைப் பெற இரு விமான நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையத்தளங்களை நாடுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

