கோலாலம்பூர்: மலேசிய விமான நிலையத்தின் பயணிகள் செயல்முறைக் கட்டமைப்பின் செயல்பாடுகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உலகெங்கும் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் உலகளாவிய பயணிகள் செயல்முறைக் கட்டமைப்பில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) காலை தற்காலிகத் தடை ஏற்பட்டதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் கூறியது. அதனால் பயணிகள் தங்கள் பயணப் பெட்டிகளை முகப்புகளில் ஒப்படைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிரமத்தை எதிர்கொண்டனர்.
பின்னர் மலேசிய விமான நிலையங்கள் அனைத்திலும் அந்தக் கட்டமைப்பின் செயல்பாடுகள் முழுவதுமாக வழக்கநிலைக்குத் திரும்பியதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.
“விமான நிலைய, விமான நிறுவனக் குழுக்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, செயல்பாடுகள் எளிதாக இருப்பதை உறுதிசெய்யும்,” என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் குறிப்பிட்டது.
முன்னதாக, மலேசியாவிற்கு சேவை வழங்கும் விமான நிறுவனங்கள் அவற்றின் அவசரகால மாற்றுத் திட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தியதாகவும் பயணிகளுக்கு உதவி செய்ய ஊழியர் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் ஃபேஸ்புக்கில் அது பதிவிட்டிருந்தது.

