மாலே: மலேசியாவும் மாலத்தீவும் கடல்துறைப் பாதுகாப்பு, பயிற்சி, ஹலால், வக்ஃப், ஹஜ்ஜு விவகாரங்களில் ஒத்துழைப்பை விரிவாக்க இணங்கியுள்ளன.
பாதுகாப்பு, இஸ்லாமிய விவகாரங்கள் குறித்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருதரப்பும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) கையெழுத்திட்டன.
கடல்துறை நாடான மாலத்தீவு, பாதுகாப்பு, பயிற்சி உள்ளிட்ட கடல்துறை ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
அதிபர் அலுவலகத்தில் அதிகாரத்துவப் பணிகளை நிறைவுசெய்த பிறகு மலேசிய ஊடகத்தைச் சந்தித்தபோது திரு அன்வார் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
இஸ்லாமிய விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், மாலத்தீவு இஸ்லாமிய நாடாக இருப்பதால் ஹலால், தக்வாஹ், வக்ஃப், ஹஜ்ஜு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வாய்ப்புகளை வழங்குகிறது என்றார்.
முன்னதாக, அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இரு ஒத்துழைப்பு ஆவணங்களின் பரிமாற்றத்தைத் திரு அன்வாரும் மாலத்தீவு அதிபர் டாக்டர் முகம்மது முய்சும் நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் கருத்துரைத்த டாக்டர் முய்ஸு, இந்த ஒப்பந்தங்கள் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளதாகவும் இந்த ஒப்பந்தங்கள் மலேசியா-மாலத்தீவு இருதரப்பு உறவுகளின் அடித்தளத்தை வலுப்படுத்துவதாகவும் சொன்னார்.
“பாதுகாப்பு ஒத்துழைப்பு, இஸ்லாமிய நம்பிக்கை ஆகிய இரண்டு முக்கியத் துறைகளில் புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதை இன்று நாம் கண்டோம். இந்த ஒப்பந்தங்கள் நடைமுறை ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறக்கின்றன, மேலும் நமது இருதரப்பு உறவின் அடித்தளத்தை மேலும் பலப்படுத்துகின்றன,” என்று டாக்டர் முய்ஸு கூறினார்.
முதலீடு, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி, மனிதவள அமைச்சர் ஆர். ரமணன், இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான மலேசியத் தூதர் பட்லி ஹிஷாம் ஆடம் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மலேசியப் பிரதமர், மாலத்தீவுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
