மூவார்: சிங்கப்பூரும் மலேசியாவும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் புதிய மின்னிலக்கக் குடிநுழைவுக் கட்டமைப்பையும் கூடுதல் தடங்களையும் அறிமுகப்படுத்த எண்ணியிருக்கின்றன.
எல்லைச் சோதனைச்சாவடிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலுக்கு மிகவும் விரிவான முறையில் தீர்வுகாண்பது நோக்கம்.
அனைத்துத் தொழில்நுட்பப் பணிகளும் உள்கட்டமைப்புகளும் நிறைவடைந்த பிறகு இந்தத் திட்டம் சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் இணைந்து கூட்டாகத் தொடங்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
இந்தத் திட்டம் தேர்தல் அறிக்கையோ புதிய அரசியல் வாக்குறுதியோ அன்று என்பதை அவர் வலியுறுத்திச் சொன்னார். தேர்தல் பிரசாரக் காலத்தில் வெளியிடப்படும் எந்தவொரு புதிய அறிவிப்பும் சட்டத்திற்குப் புறம்பானது என்பதைத் திரு அன்வார் தெளிவுபடுத்தினார்.
“போக்குவரத்தை எளிதாக்குவதற்கான மேம்பட்ட நவீன மின்னிலக்கக் குடிநுழைவுக் கட்டமைப்பு உட்பட புதிய திட்டம் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மூவாரில் நடைபெற்ற இளையர் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் மலேசியப் பிரதமர் பேசினார்.
நாட்டின் எல்லைச்சாவடிகளில் சோதனைகளை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளைக் குடிநுழைவுத் துறையின் மூலம் உள்துறை அமைச்சு தீவிரப்படுத்திவருவதாக அவர் சொன்னார்.
“குடிநுழைவுத் துறை, போக்குவரத்தை எளிதாக்கும். கட்டமைப்புத் தயாரானதும் சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருக்கான புதிய பயண ஏற்பாடுகளும் இதில் சேர்த்துக்கொள்ளப்படும்,” என்றார் திரு அன்வார். பெர்னாமா செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
எல்லைச்சாவடிகளின் செயல்திறன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது மேம்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும் குடிநுழைவு நடைமுறைகளை மேலும் மெருகேற்றுவதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகத் திரு அன்வார் கூறினார்.
இதன் தொடர்பில் அரசாங்கம் நீண்டகாலத் தீர்வுகளையும் ஆராய்ந்துவருவதாக அவர் சொன்னார். மலேசியர்கள் வேலைக்காகச் சிங்கப்பூருக்குச் செல்வதைக் குறைப்பதற்கான வழிகளும் அவற்றுள் அடங்கும் என்றார் திரு அன்வார். அதற்காக உள்நாட்டு உயர்-தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்த மலேசியா திட்டமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்புகிறோம். ஏனெனில், சிங்கப்பூரில் வேலைசெய்யும் நம் மக்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அவர்கள் இப்படிச் சிரமப்படக் கூடாது. எனவே நாம் இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டும்,” என்றார் மலேசியப் பிரதமர்.

