மலேசியாவும் சிங்கப்பூரும் ஊழியர் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்: ரமணன்

மலேசியாவும் சிங்கப்பூரும் ஊழியர் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்: ரமணன்

2 mins read
3af20760-7985-4e1b-85d4-f266191736e7
மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன். - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மாறிவரும் வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப, மலேசியாவும் சிங்கப்பூரும் தொழிலாளர் துறையின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தாம் அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட போது, தற்காலிக மனிதவள அமைச்சர் ஜாஸ்மின் லாவ்வைச் சந்தித்துப் பேசியதாகவும் தொழில் துறை ஒத்துழைப்பு மேம்பாடு குறித்து அப்போது இருவரும் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வருங்காலப் பொருளியலுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊழியரணியைத் தயார்படுத்துவதில் மலேசியாவும் சிங்கப்பூரும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பேசியதோடு, தற்போதைய ஊழியர் சந்தையின் வளர்ச்சி குறித்து இருதரப்பும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் திரு ரமணன் கூறினார்.

“மலேசியாவும் சிங்கப்பூரும் வேலைவாய்ப்புச் சூழலில் விரைவான மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றன.

“எனவே, மாறிவரும் வேலைச்சூழல் மற்றும் பொருளியல் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர் கொள்கைகளும் பணியாளர் பாதுகாப்பும் தொடர்ந்து உருவாகி வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திறன் மேம்பாட்டு முயற்சிகளோடு நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைக் கடைப்பிடிக்கக்கூடிய ஊழியரணியைச் சிறந்த முறையில் தயார்ப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இருவரின் ஆலோசனையில் உள்ளடங்கியதாக திரு ரமணன் கூறினார்.

“தொழிலாளர் நலன்களிலும் உரிமைகளிலும் எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இன்றி, முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய வேலைவாய்ப்புச் சூழலை உருவாக்க வேண்டும்.

“அந்த முயற்சியின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்வது முக்கியமானது,” என்றார் அவர்.

மலேசியாவும் சிங்கப்பூரும் ஒரு தனித்துவமான, நெருங்கிய தொழிலாளர் உறவைப் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்ட திரு ரமணன், இது திறமை மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய இரு நாடுகளுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றார்.

குறிப்புச் சொற்கள்
ஊழியர்மனிதவளம்மலேசியா