கோலாலம்பூர்: சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராகத் தலைநகரில் பேரணி நடத்த ஏற்பாடு செய்தோரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்தக் கைது நடவடிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெற்றது. நான்கு பெண்கள் உள்ளிட்ட 19 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
இஸ்லாமிய சமய போதகர் ஸம்ரி வினோத் என்பவரும் கைது செய்யப்பட்டோரில் அடங்குவார்.
சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான இயக்கம் என்ற பெயரில் பதாகைகளை ஏந்தி பேரணியை முன்னின்று நடத்தத் திட்டமிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கைது நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) காலை கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் உறுதிப்படுத்தினார்.
ஸம்ரி வினோத்தையும் பேரணி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் என்பவரையும் விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றத்திடம் காவல்துறை அனுமதி கோரும் என்று அவர் தெரிவித்தார்.
“இனம், சமயம், அரச மரபு ஆகியவற்றுக்கு எதிரான விவகாரத்தையும் கையில் எடுக்கும் எந்தவொரு முயற்சி குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
“பொதுமக்களைத் தூண்டி, சட்ட ஒழுங்கிற்குக் கேடு விளைவுக்கும் தனிப்பட்டோர் மற்றும் குழுக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று திரு ஃபாடில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியா வந்துள்ள வேளையில், அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படும் எந்தவொரு செயலுக்கும் அனுமதி இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேநேரம், பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.
பேரணிக்கு எதிராக நூற்றுக்கு மேற்பட்ட புகார்கள்
இந்நிலையில், சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
“பாதுகாப்புக் காரணங்களைப் பரிசீலித்த பின்னரும் உளவுத்துறையின் தகவல்களைத் தொடர்ந்தும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை,” என்று திரு ஃபாடில் விளக்கம் அளித்தார்.
இருந்தபோதும், அனுமதி இன்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறியும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சனிக்கிழமை (பிப்ரவரி 7) இரவு 8 மணியளவில் சோகோ வணிக வளாகம் அருகே கிட்டத்தட்ட 100 பேர் திரண்டதைக் காவல்துறை கண்டதாகவும் அவர் கூறினார்.
உதவிக்கரம்
இதற்கிடையே, முறையான அனுமதி இன்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படும் இடங்கள் தொடர்பான விவகாரத்தைச் சரிப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு உதவ தயார் என்று மலேசிய வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

