புத்ராஜெயா: மலேசியாவில் புதன்கிழமை (பிப்ரவரி 4) முதல் மின்கழிவு இறக்குமதி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை சுற்றுச்சூழல், நுகர்வோர் ஆதரவுக் குழுக்கள் வரவேற்றுள்ளன.
கடத்தலைத் தடுக்க கடுமையான செயலாக்கம் தேவை என்று அவை கோரியுள்ளன.
சுங்கத் துறையின் உத்தரவின்படி இனிமேல் மின்கழிவு இறக்குமதிக்கு எந்தவித விலக்குகளும் வழங்கப்படாது.
மின்கழிவுகள் மலேசியாவில் கொட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட பணிக் குழுக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி மீதான மூன்று மாத தற்காலிகத் தடை குறித்தும் அக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.
மின்கழிவுகள் இனி நாட்டிற்குள் அனுமதிக்கப்படாது. இதற்கு அனைத்து அரசு நிறுவனங்களும் இணைந்து கடுமையான அமுலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
“செயலாக்கம் கடுமையானதாக இருக்க வேண்டும். கடத்தல்காரர்கள் ஓட்டைகளையும் ஊழலையும் பயன்படுத்தி விதிமுறைகளை மீறுகிறார்கள்,” என்று மலேசியச் சூழலியல் நண்பர்கள் (Malaysian Friends of Nature/Environment SAM) அமைப்பின் தலைவர் மீனாட்சி ராமன் என்று எச்சரித்தார்.
“மின்கழிவுகளில் கனரக உலோகங்கள், நச்சுப் பொருள்கள் உள்ளன, அவை ஊழியர்களுக்கும் அருகிலுள்ள சமூகங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“முறையற்ற மறுபயனீடு, திறந்த வெளியில் எரிக்கப்படுவது காற்று, மண், நீரை அசுத்தப்படுத்துகிறது. மேலும் நுண்ணுயிரிகள் நீர்வழிகளுக்குள் ஊடுருவுகின்றன.
“இதனால் நாள்பட்ட நோய், நீண்டகாலப் புற்றுநோய் அபாயங்கள், சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.
இரண்டாவது வகை மின்கழிவு அல்லது உலோகக் கழிவு என்ற போர்வையில் சட்டவிரோத ஏற்றுமதிகள் பெரும்பாலும் மலேசியாவுக்குள் நுழைகின்றன.
பொருளியல் ஒத்துழைப்பு மேம்பாட்டு அமைப்பின் (OECD) 2025ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2023 முதல் உலகிலேயே அதிக மின்கழிவுகளை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக மலேசியா உள்ளது.

