மலேசியா: உயர்நிலைப் பள்ளி கல்வியைக் கட்டாயமாக்க மசோதா தாக்கல்

மலேசியா: உயர்நிலைப் பள்ளி கல்வியைக் கட்டாயமாக்க மசோதா தாக்கல்

1 mins read
dcf71603-8e64-4a25-b92a-9899054d592c
படம்: - பிக்சாபே

கோலாலம்பூர்: மலேசியாவில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் கட்டாயமாக்கும் நோக்கத்தோடு தற்போது அமலில் இருக்கும் கல்விச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 28) தாக்கல் செய்யப்பட்டது.

திருத்தப்பட்ட கல்விச் சட்டம் 2025ஐ முதல் வாசிப்புக்காகத் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தற்போதைய நாடாளுமன்ற அமர்விலேயே அச்சட்டத்திற்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, கல்விச் சட்டம் 1996ல் குறிப்பிடப்பட்டிருக்கும் “கட்டாயக் கல்வி” என்ற வரையறையில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைச் சேர்ப்பதற்காக அச்சட்டத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், 32A எனும் புதிய சட்டப் பிரிவையும் அந்த மசோதா அறிமுகப்படுத்துகிறது.

மலேசியாவில் வசிக்கும் அனைத்து மலேசியக் குடிமக்களின் பிள்ளைகளுக்கும் உயர்நிலைக் கல்வியைக் கட்டாயமாக்க அந்நாட்டுக் கல்வி அமைச்சருக்கு அப்புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

கூடுதலாக, தங்கள் பிள்ளைகளைத் தொடக்கப் பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் சேர்ப்பது பெற்றோரின் சட்டபூர்வமான கடமையாக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமாக விலக்கு அளிக்கப்படாத பட்சத்தில், புதிய கல்விச் சட்டத்தை மீறும் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

அமலாக்கம், விலக்கு அளிப்பது தொடர்பான கூடுதல் விதிமுறைகளை உருவாக்க அமைச்சருக்கு அதிகாரம் வழங்கவும் தாக்கல் செய்யப்பட்ட புதிய சட்டம் இடமளிக்கிறது.

குறிப்புச் சொற்கள்