மலேசியாவில் மூவரைப் பலிவாங்கிய படகு விபத்து; விதிமீறல்கள் இருந்தன: அமைச்சர்

2 mins read
67fa611f-c89d-40a4-b1ba-9d9f5efab037
சம்பவத்தில் பிள்ளைகள் இருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். - படம்: மலேசியக் கடல்துறை அமலாக்கப் பிரிவு / நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பெர்ஹென்டியான் தீவில் விபத்துக்குள்ளான படகை இயக்கிய நிறுவனம் பல விதிமுறைகளை மீறியதாக மலேசிய சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

அப்படகின் உரிமம் காலாவதியாகியிருந்தது என்றும் கப்பலின் மாலுமி போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது என்றும் திரு தியோங் கூறினார்.

அந்த விபத்தில் மூவர் மரணமடைந்தனர். அவர்களில் இரு சிறுமியரும் அடங்குவர்.

சிறுமியரில் ஒருவருக்கு வயது மூன்று, மற்றொருவருக்கு 10 வயது. விபத்துக்குப் பலியான மற்றொருவர் மூன்று வயது சிறுமியின் தந்தையான 40 வயது ஆடவர்.

கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) இரவு புயல் வீசிக்கொண்டிருந்தபோது அவர்கள் இருந்த படகு கவிழ்ந்தது. அவ்விபத்தில் மேலும் 12 பேர் சிகிச்சைக்காக பெசுட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸாமுதீன் அகமது அபு தெரிவித்தார். அவர்களில் கவலைக்கிடமாக இருக்கும் ஆறு வயது பிள்ளையும் ஒருவர்.

கனமழை, கடல் கொந்தளிப்பு காரணமாக 15 பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்தது. சம்பந்தப்பட்ட பயண நிறுவனமும் படகை நடத்திய நிறுவனமும் பல சட்டங்கள், விதிமுறைகளை மீறியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என திரு தியோங் குறிப்பிட்டுள்ளார்.

“உரிமம் காலாவதியான படகை இயக்கியது, பயணிகள் பாதுகாப்புக் கவசங்களை அணிந்திருப்பதை உறுதிசெய்யாதது ஆகியவை அவற்றில் அடங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக படகைச் செலுத்தியவர் போதைப்பொருள் உட்கொண்டது அதிர்ச்சி தருகிறது,” என்று திரு தியோங் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அறிக்கையில் தெரிவித்தார்.

“மூவர் மரணமடைந்தது ஒன்பது பேர் காயமுற்ற, பெர்ஹென்டியான் தீவுக்கு அருகே நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் எனக்கு ஆத்திரமூட்டுகிறது,, மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உடனடியாக முழு விசாரணை மேற்கொள்ளுமாறு நான் அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாபடகுவிபத்துஉயிரிழப்புஅறிக்கை