தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிவேக ரயில் திட்டத்தின் அடுத்தகட்டம்: ஆலோசிக்கும் மலேசிய அமைச்சரவை

2 mins read
805b1918-d3b7-4efb-bf05-2749bdf139b2
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து வரும் வாரங்களில் மலேசிய அமைச்சரவை ஆலோசிக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

350 கிலோமீட்டர் நீளம்கொண்ட அப்பாதையைக் கட்டுவதற்குப் போதுமான நிதி இல்லாததே ஆகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அதிவேக ரயில் திட்டத்தைத் தொடர்வதற்குத் தாம் தயார் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி அத்திட்டத்துக்கு 100 பில்லியன் ரிங்கிட் (30.5 பில்லியன் வெள்ளி) தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிவேக ரயில் திட்டத்துக்கான நிதி தனியார் துறையிலிருந்துதான் வரவேண்டும் என்று ஈராண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரு அன்வாரின் அரசாங்கம் வலியுறுத்தி வந்துள்ளது. மலேசியாவுக்கு இருக்கும் 1.24 டிரில்லியன் ரிங்கிட் கடனை அடைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அதற்குக் காரணம்.

அதிவேக ரயில் திட்டத்துக்கு நிதியுதவி வழங்குமாறு அதிகாரபூர்வமற்ற முறையில் சென்ற ஆண்டு சீனாவிடம் கேட்கப்பட்டது. அம்முயற்சி கைகொடுக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தோர் ரகசியமாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையே ஒன்றரை மணிநேரத்தில் பயணம் செய்வதற்கு வகைசெய்யக்கூடிய அதிவேக ரயில் திட்டத்தால் நிதி இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவது அதற்குக் காரணமாகும்.

“சீனாவில்கூட பெய்ஜிங்-‌ஷாங்காய், குவாங்சூ-‌ஷென்சன் அதிவேக ரயில் திட்டங்கள் மட்டுமே லாபகரமாக உள்ளன. மற்றவற்றுக்கு அதிக செலவை ஈடுகட்ட அரசாங்கச் சலுகைகள் தேவைப்படுகின்றன,” என்று அதிவேக ரயில் திட்டம் தொடர்பிலான நிறுவனக் குழுவுடன் சம்பந்தப்பட்ட மலேசிய தொழில்துறைத் தலைவர் ஒருவர் சுட்டினார். தனது நிறுவனக் குழுவால் 20 பில்லியன் ரிங்கிட் தொகையைப் புரட்ட முடியும் என்றும் எஞ்சிய 80 பில்லியன் ரிங்கிட்டை நிதி நிலையங்கள் கடனாக வழங்கத் தயங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அரசாங்கச் சலுகைகள் இல்லாமல் சமாளிப்பது சிரமம்,” என்றும் அவர் சொன்னார். இதுகுறித்து கருத்து தெரிவிக்கத் தனக்கு அதிகாரம் இல்லாததால் அந்நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

இம்மாதத் தொடக்கத்தில் அதிவேக ரயில் திட்டத்தின் தொடர்பிலான கொள்கை ஆவணம் (policy paper) குறித்து கலந்துபேசப்படவுள்ளது. ஆனால், திட்டம் மீண்டும் தொடரப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படாது என மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

அதிவேக ரயில் திட்டம் குறித்து சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருப்பதை அவர் காரணமாகச் சொன்னார்.

“அமைச்சரவையின் ஒப்புதல் அதிவேக ரயில் திட்டத்துக்கான இறுதி முடிவல்ல; அது அடுத்தகட்ட நடவடிக்கையைத் தெளிவுபடுத்தும் ஒன்றாகத்தான் இருக்கும்,” என்று திரு லோக், நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சென்ற மாதம் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்