கோலாலம்பூர்: மலேசியாவின் அரசியல் சீராக இருப்பதாலும் பொருளியல் மேம்பட்டு வருவதாலும் தாய்லாந்தும் கம்போடியாவும் தங்களுக்கு இடையே நடந்துவரும் அமைதிப் பேச்சுக்குரிய இடமாக மலேசியாவைத் தெரிவு செய்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஆசியான் வட்டாரம் அமைதியாகவும் நிலையாகவும் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க மலேசியா நட்பார்ந்த நாடு என்ற முறையில் பெருமை கொள்வதாகத் திரு அன்வார் கூறினார்.
கம்போடிய தற்காப்பு அமைச்சர் தியே செய்ஹா, தாய்லாந்தின் தற்காப்பு அமைச்சர் நட்டாபோன் நர்பானிட் ஆகியோர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) கோலாலம்பூரை அடைந்து கலந்துரையாடல் வழியாக தீர்வு காண முயல்வர்.
“கோலாலம்பூரில் அவ்விரு நாடுகளையும் இணங்க வைக்க நம்மால் முடிந்தால் நாம் போரை நிறுத்திவிடலாம். நினைத்துப் பாருங்கள்,” என்று திரு அன்வார் கூறினார்.
இவ்வாண்டு மலேசிய தேசிய பண்ணையாளர்கள், மீனவர்கள் தினத்தின் நிறைவு விழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து திரு அன்வார் மேற்கண்டவாறுகூறினார்.
தற்போது ஆசியான் அமைப்புக்கு மலேசியா தலைமையேற்றுள்ளதால் புத்ராஜெயாவில் ஜூலை 28ல் கம்போடியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான சந்திப்பை திரு அன்வார் வழிநடத்தினார்.
அந்தச் சந்திப்பின்போது உடனடியாக, நிபந்தனைகள் இல்லாத சண்டை நிறுத்தத்தைச் செயல்படுத்த தாய்லாந்தும் கம்போடியாவும் இசைந்தன.
இதில் மலேசியா அடைந்துள்ள வெற்றி, அதனை உலக அரங்கில் மேலும் பிரபலப்படுத்தி உள்ளதாக திரு அன்வார் பெருமையுடன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வெற்றி, உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்ததாகக் கூறிய திரு அன்வார், தம்மை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைத்து மலேசியாவின் முயற்சிகளைப் பாராட்டியதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றுடன் ஆசிய நாடுகளின் கவனத்தையும் பாராட்டுகளையும் மலேசியா பெற்றதாகத் திரு அன்வார் கூறினார்.
“பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதிபர் டிரம்ப்பையும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கையும் நான் தொடர்பு கொண்டேன். இறுதியாக நாங்கள் தாய்லாந்தையும் கம்போடியாவையும் ஒப்புக்கொள்ளும்படி கேட்டிருந்தோம்,” என்று அவர் கூறினார்.