கோலாலம்பூர்: மலேசியா ஆசியானின் தலைமைத்துவத்தை அடுத்த ஆண்டு (2025) ஏற்கத் தயாராகிவரும் வேளையில், ஆசியான் நாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேண அது கடப்பாடு கொண்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
சிஎன்பிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.
வட்டார விவகாரங்கள் தொடர்பில் ஆசியான் நாடுகள் ஆக்ககரமான கலந்துரையாடலை நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
“தாய்லாந்துடன் எல்லை தொடர்பாகவும் தண்ணீர் விவகாரம் தொடர்பில் சிங்கப்பூருடனும் சிறு பிரச்சினைகள் நிலவுகின்றன. இருப்பினும், எதிரிகளைப்போல் அது பற்றி கசப்பான முறையில் நாங்கள் கலந்துபேசுவதில்லை,” என்றார் அவர்.
“ நண்பர்களைப்போல், சகோதரர்களைப்போல், ஒரு குடும்பத்தினரைப்போல் கலந்துரையாடுகிறோம். எங்களால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று நம்புகிறேன். தீர்வு எட்டப்படாவிட்டாலும்கூட இதனால் அவநம்பிக்கையோ பகைமையோ போரோ ஏற்படாது,” என்று திரு அன்வார் சொன்னார்.
தென்சீனக் கடல் விவகாரம் போன்ற சர்ச்சைக்குரிய அம்சங்கள் தொடர்பில் கருத்திணக்கம் ஏற்படும் என்று நம்புவதாகக் கூறிய அவர், இத்தகைய விவகாரங்களில் இருதரப்பு, பலதரப்பு, ஆசியான் நடைமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
அதேவேளையில், அனைத்து நாடுகளுடனும் ஆக்ககரமான உறவுகளை மேம்படுத்த மலேசியா கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் கூறினார். அமெரிக்கா, சீனா ஆகியவற்றுடனான வலுவான உறவுகளைத் திரு அன்வார் சுட்டினார்.
இதற்கிடையே, ஊழலுக்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் எதிரான மலேசிய அரசாங்கத்தின் போருக்குப் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் என்று திரு அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பேராக்கிலுள்ள யுபிஎஸ்ஐ பல்கலைக்கழகத்தில் அவர் உரையாற்றினார்.
அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் நாட்டின் நிதியிலிருந்து பில்லியன்கணக்கான ரிங்கிட் தொகையைக் கையாடல் செய்யும் தனிநபர்களை ஒருபோதும் அது பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் கூறினார். அத்தகைய சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்திருந்தாலும் அண்மையில் நடந்திருந்தாலும் அவற்றுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.
அவ்வாறு கையாடல் செய்த முன்னாள் தலைவர்கள் அந்தப் பணத்தை நாட்டிடம், மக்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.