கோலாலம்பூர்: ‘ஒரே சீனா கொள்கை’யை அங்கீகரிக்கும் அதே வேளையில், தைவானுடன் வலுவான பொருளியல் உறவுகளைப் பேணுவதில் மலேசியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (நவம்பர் 11) நிலவரப்படி, தைவானிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று பிரதமர் கூறினார்.
“தைவான் ஒரு முக்கியமான வர்த்தகப் பங்குதாரர். நமது பொருளியல் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீட்டு உறவுகள் சிறப்பாக உள்ளன. மேலும் இந்த நேர்மறையான பொருளியல், வர்த்தக உறவுகளை நாம் பராமரிக்க விரும்புகிறோம்,” என்று அவர் வியாழக்கிழமையன்று (நவம்பர் 12) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமரின் கேள்வி நேரத்தின்போது கூறினார்.
இருப்பினும், ஒரே சீனா கொள்கையை நாம் மீற முடியாது. நமது அங்கீகாரம் ஒரே சீனாவாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
மலேசியாவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தைவான் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளதாக திரு அன்வார் தெரிவித்தார். இதில் கெடாவில் சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டுத் திட்டமும் அடங்கும்.
“என்னைப் பொறுத்தவரை, தைவானிய முதலீடுகள், வர்த்தகச் செயல்பாடுகளில் இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.
புதிய முதலீடுகள் வந்துள்ளன, பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன. இருப்பினும், வர்த்தக உறவுகள், பொருளியல் ஒத்துழைப்பு, தைவானுடனான நமது நேர்மறையான பணி உறவு ஆகியவற்றுக்கு இடையே நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
