கோலாலம்பூர்: மின்சிகரெட் பயன்பாடு, விற்பனை ஆகியவற்றை முழுமையாகத் தடைசெய்ய மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது அறிவித்துள்ளார்.
மலேசிய நாடாளுமன்றத்தின் கீழவையில் திங்கட்கிழமை (ஜூலை 28) அவர் பேசினார்.
இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். சட்டத் துறை, தொழில்துறைகள், அரசாங்க வருவாய்த் துறை உள்ளிட்ட தரப்புகளிடமிருந்து கருத்து சேகரிக்கப்பட்ட பின்னரே இதற்கு சட்டத்தை அமல்படுத்த முடியும் என்று திரு ஸுல்கிஃப்லி விவரித்தார்.
மலேசியாவில் தற்போது நடப்பில் உள்ள விதிமுறைகளின்கீழ், குறிப்பிட்ட சில பொருள்களை விற்கும் கடைகளில் (specialty stores) புகைப்பிடிப்புப் பொருள்களை விற்பதன் தொடர்பில் கட்டுப்பாடுகள் உள்ளன. அந்தக் கட்டுப்பாடுகள், சில்லறை வர்த்தகக் கடைகள், அன்றாட அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் (convenience stores) ஆகியவற்றுக்குப் பொருந்தாது.
“முழுமையான கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த, குறிப்பாக மின்சிகரெட் விற்பனை, பயன்பாட்டைக் கருத்தில்கொள்ளும்போது, மத்திய அரசாங்க நிலையில் முழுமையான ஆய்வையும் கூடுதல் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது,” என்று திரு ஸுல்கிஃப்லி சொன்னார்.
“அந்த வகையில், இந்த விவகாரத்தை மேலும் ஆக்கபூர்வமாகவும் முழுமையாகவும் கையாள மின்சிகரெட்டுகளை விற்பதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒட்டுமொத்தத் தடை விதிப்பதை நோக்கி சுகாதார அமைச்சு சென்றுகொண்டிருக்கிறது. எனினும், அத்தகைய தடையைக் கவனமாகச் செயல்படுத்தவேண்டும்,” என்றும் அவர் விளக்கிமளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு திரு ஸுல்கிஃப்லி இவ்வாறு பதிலளித்தார் என்று மலாய் மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது. மின்சிகரெட் பொருள்களை விற்பதற்கான உரிமங்களை வழங்க ஜோகூர், கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ், கெடா, பாஹாங் ஆகிய மாநிலங்கள் எடுத்திருக்கும் முடிவைத் தாம் ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மின்சிகரெட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வகைசெய்யும் உத்திகள் குறித்தும் புகைப்பிடிப்புப் பொருள்கள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் வழிகளையும் பற்றிப் பேச மின்சிகரெட் விவகாரங்களுக்கான வல்லுநர்க் குழு இம்மாதம் 22ஆம் தேதி சந்தித்ததாக அவர் தெரிவித்தார். பொதுச் சுகாதாரத்துக்கான புகைப்பிடிப்பு பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் அவற்றுக்குக் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துவதற்குத் தமது அமைச்சு தற்போது ஆக அதிக முக்கியத்துவம் அளிப்பதாக திரு ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.