தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து விரைவில் முடிவு: மலேசியா

2 mins read
58dd24db-2546-4442-adcd-482a3dcbb7cd
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து 2024 இறுதிக்குள் முடிவெடுக்கப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் தெரிவித்துள்ளார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டம் குறித்து வரும் மாதங்களில் முடிவெடுக்கப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

அத்திட்டம் சாத்தியமானதா இல்லையா என்பது குறித்து இவ்வாண்டின் நான்காம் காலாண்டிற்குள் மலேசிய அமைச்சரவை முடிவெடுக்கும் என்று தாம் நம்புவதாக புதன்கிழமை (ஜூலை 17) புளூம்பெர்க் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது திரு லோக் சொன்னார்.

“அதிவேக ரயில் திட்டத்தைத் தொடர்வது குறித்து கொள்கை சார்ந்த முடிவெடுத்ததும், சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம்,” என்று அவர் கூறினார்.

அத்திட்டம் தொடர்பில் தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாகக் கடந்த ஆண்டு மலேசியா அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, ஏழு விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவற்றிலிருந்து முதற்கட்டமாக மூன்று விண்ணப்பங்களைத் தேர்வுசெய்துள்ளதாக திரு லோக் தெரிவித்துள்ளார்.

அதிவேக ரயில் திட்டத்தின் உத்திசார் சொத்துகளானவை, மலேசிய நிறுவனங்கள் குறைந்தது 51% பங்கு கொண்டுள்ள குழுமத்திடம் இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகக் கூறப்படுகிறது.

கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையே 350 கிலோமீட்டர் நீள அதிவேக ரயில் திட்டத்திற்கு கடந்த 2013ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும், செலவுகள், மற்ற விவகாரங்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், அத்திட்டத்திற்கு மீண்டும் புத்துயிரூட்ட முயல்வேன் என்று கடந்த டிசம்பர் மாதம் ஜோகூர் சுல்தான் தெரிவித்திருந்தார். அதற்கடுத்த மாதம், அதாவது 2024 ஜனவரியில் அவர் மலேசிய மாமன்னராகப் பதவியேற்றார்.

இப்போது, கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையிலான கார் பயணத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாகிறது. இந்நிலையில், அதிவேக ரயில் திட்டமானது அதனை ஒன்றரை மணி நேரமாகக் குறைக்கும்.

அதிவேக ரயில் திட்டத்தால் மலேசிய அரசாங்கத்திற்கு 100 பில்லியன் ரிங்கிட் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டது. அவ்வளவு பெரிய தொகை அரசாங்கத்தின் கடனை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டது.

“எங்கள் கடன் பொறுப்பை மேலும் அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை. இதில் தனியார் துறையை ஊக்குவிக்க பல்வேறு அம்சங்கள் உள்ளன,” என்று திரு லோக் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்