பெட்டாலிங் ஜெயா: இவ்வாண்டின் ஜனவரி 1 முதல் ஜூலை 6 வரை 28,000க்கும் மேற்பட்டோர் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
குடிநுழைவுச் சட்டம் 1959/63ன்கீழ் அவர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்று எழுத்துவழி நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 21,039 பேர் வயதுவந்த ஆண்கள் (74%), 6,145 பேர் வயதுவந்த பெண்கள் (21%), 778 பேர் சிறுவர் (3%), 563 பேர் சிறுமியர் (2%).
நாடுகடத்தப்பட்டோரில் 11,085 பேர் இந்தோனீசியர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக மியன்மார் நாட்டினரும் (4,885 பேர்) பிலிப்பீன்ஸ் நாட்டினரும் (4,465 பேர்) தத்தம் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சென்ற 2024ஆம் ஆண்டில் 8,627 அகதிகளும் புகலிடம் கோரியோரும் வெளிநாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். இவ்வாண்டில் ஜூன் மாதம் வரை, 947 பேர் வெளிநாடுகளில் குடியேறிவிட்டனர் என்றும் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அவர்கள் குடியேறினர் என்றும் திரு நசுத்தியோன் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

