கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தின் துணை நாயகர் ரம்லி முகம்மது நோர், நாடாளுமன்ற நாயகர் இருக்கையிலிருந்து இறங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கையில் அமர்ந்து 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்றுள்ளார்.
அதனால், இருக்கை சிறிது நேரம் காலியாக இருந்தது. இதன் காரணமாகத் திங்கட்கிழமை (நவம்பர் 16) நாடாளுமன்றத்தில் வழக்கத்திற்கு மாறான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை அமைச்சின் விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் பட்டியலை வாசித்துக்கொண்டிருந்த திரு ரம்லி, கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தானும் அதில் பங்கேற்கப்போவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் மேடையிலிருந்து இறங்கித் தமது நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கைக்குச் சென்றார்.
அந்தச் செயலுக்குப் பெலுரான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ரொனால்ட் கியாண்டி உடனடியாக மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற நாயகர் இருக்கை காலியாக இருந்தபோது அவையை யார் வழிநடத்துவது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதனை இதற்குமுன் நடந்திடாத ஒரு செயல் என்று குறிப்பிட்ட ரொனால்ட், விவாதத்தில் பங்கேற்பதற்காகத் திரு ரம்லி இருக்கையிலிருந்து இறங்குவதற்கு முன்பு ஒரு தற்காலிக நாயகர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
தமது நடவடிக்கையை நியாயப்படுத்திய திரு ரம்லி, இது குறித்த விதிமுறைகளைத் தான் சரிபார்த்ததாகவும் அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதைக் கண்டறிந்ததாகவும் கூறினார். மேலும், தமது உரையை நிகழ்த்திய உடனேயே மீண்டும் இருக்கைக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்ததைத் தொடர்ந்து, துணை நாயகர் ஆலிஸ் லாவ் தற்காலிகமாக இருக்கைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவைக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து, திரு ரம்லி மீண்டும் நாடாளுமன்ற நாயகர் இருக்கைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
