கோலாலம்பூர்: மலேசியா பாலஸ்தீனர்களின் துயரத்தைத் தணிக்க 100 மில்லியன் ரிங்கிட் ($30.6 மில்லியன்) நன்கொடை வழங்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) கூறியிருக்கிறார்.
கோலாலம்பூரின் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கம் முதலில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக 100 மில்லியன் ரிங்கிட் உதவித்தொகை கொடுப்பதாக அறிவித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
இப்போது மேலும் 100 மில்லியன் ரிங்கிட் அவர்களுக்குத் தரப்படும் என்று திரு அன்வார் சொன்னார்.
“இந்த நாடு அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை நினைவில்கொள்ளுமாறு மலேசியர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இதிலிருந்து கற்றுக்கொண்டு அனைவருக்குமான அமைதியையும் சுதந்திரத்தையும் பேணிக்காக்க வேண்டும்,” என்றார் அவர்.
காஸாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சத்துக்கு இஸ்ரேலிய அரசாங்கத்தைத் திரு அன்வார் கடுமையாகச் சாடினார். பசி, பட்டினியால் அன்றாடம் அங்கு ஏராளமானோர் மரணமடைவதாக அவர் சொன்னார்.
“எல்லா விதமான உதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால் உதவிப்பொருள்கள் பாழாகட்டும் என்று இஸ்ரேல் முடிவெடுத்தது. மக்கள் மாண்டுபோகின்றனர். பசியால் வாடுகின்றனர். உணவு, மருத்துவப்பொருள்கள் எல்லைப் பகுதியிலேயே தேங்கிக் கிடக்கின்றன. எனக்கு 78 வயதாகிறது. இத்தகைய கொடுமையை நான் இதுவரை கண்டதில்லை,” என்று அவர் சொன்னார்.
மலேசியர்கள் பாலஸ்தீனர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவுக்காகத் தமது இளம் வயதில் குரல் கொடுத்ததைத் திரு அன்வார் நினைவுகூர்ந்தார். 1983ஆம் ஆண்டு அல்ஜீரியத் தலைநகர் அல்ஜியர்சில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு மாநாட்டுக்காகத் தாம் அழைக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
“இப்போது 2025ல், இன்னும் அதே நிலைமைதான்,” என்று திரு அன்வார் வருத்தப்பட்டார்.
மலேசியா எந்த வகையான காலனித்துவத்தையும் எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். 1957க்கு முன்பு ஆங்கிலேயர்கள் நாட்டைக் காலனித்துவ ஆட்சியின்கீழ் கொண்டுவந்ததை அவர் சுட்டினார்.
“காஸாவில் இப்போது நடப்பதும் ஒரு வகை காலனித்துவம்தான்,” என்று திரு அன்வார் கூறினார்.
மலேசியப் பிரதமர் பேசிய பிறகு காஸாவுக்காக வழிபாட்டுக் கூட்டமும் நடத்தப்பட்டது.
திரு அன்வாருடன் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
காஸாவுக்கு ஆதரவாக நடைபெற்ற ஒற்றுமைப் பேரணியில் ஆயிரக் கணக்கான மலேசியர்கள் பங்கேற்றனர்.
சுமுட் நுசாந்தரா இயக்கத்தையும் திரு அன்வார் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். மலேசியா, இந்தோனீசியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை, தாய்லாந்து உட்பட எட்டு நாடுகள் இயக்கத்தின் கப்பல் பயணத்தில் பங்கெடுக்கின்றன. முதல் குழு இம்மாதம் (ஆகஸ்ட் 2025) 31ஆம் தேதியும் மற்றொரு குழு செப்டம்பர் 4ஆம் தேதியும் புறப்படும்.
வரலாற்றில் ஆக அதிக எண்ணிக்கையில் கப்பல்கள் கலந்துகொள்ளும் இயக்கம் இது. இதில் 50க்கும் அதிகமான நாடுகள் பங்கெடுக்கின்றன. அனைத்துக் கப்பல்களும் காஸாவுக்கு உதவிப் பொருள்களை ஏற்றிச்செல்கின்றன.