பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆறு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளப் பாதிப்பு தொடர்பான படங்களும் காணொளிகளும் செய்தி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
புதன்கிழமை (டிசம்பர் 17) முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பாகாங் சுல்தான் அகமது ஷா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை ஒரு காணொளி காட்டியது. இதனால் 135 மாணவர்கள் உயரமான பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பள்ளிவாசலில் தங்கியுள்ளனர்.
கிழக்கு கடற்கரையைச் சுற்றியுள்ள மொத்தம் 9,027 பேர் வீடுகளைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாகாங்கின் தலைநகரம் குவாந்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
திரெங்கானுவில் 900க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி வியாழக்கிழமை (டிசம்பர் 18) நண்பகல் வரை, பாகாங், திரெங்கானு, ஜோகூர், சிலாங்கூர், கிளந்தான், சரவாக் ஆகிய ஆறு மாநிலங்களில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 9,261 ஆகி உள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாகப் பாகாங் உள்ளது.

