மலேசியா: ஒன்றிணைக்கப்படும் வெளிநாட்டு ஊழியர் அனுமதி முறை

மலேசியா: ஒன்றிணைக்கப்படும் வெளிநாட்டு ஊழியர் அனுமதி முறை

2 mins read
06026034-870f-4b94-869b-61ab11485200
மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன். - கோப்புப் படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசிய மத்திய அரசாங்கம், எத்தனை வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்கலாம் என்பதன் தொடர்பான நடவடிக்கைகளை அந்நாட்டின் மனிதவள அமைச்சின்கீழ் ஒன்றிணைத்துள்ளது.

அதன்படி சம்பந்தப்பட்ட எல்லா விண்ணப்பங்களும் இனி ஒரு மின்னிலக்க முறையின்வழி சமர்ப்பிக்கப்படவேண்டும். மனிதர்களின் தலையீடு, சில விண்ணப்பங்களைத் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து அனுமதி தருவது ஆகியவற்றைத் தவிர்ப்பது இலக்குகளாகும்.

அமைச்சரவை ஒப்புதல்

இந்த மாற்றத்துக்கு கடந்த புதன்கிழமை (ஜூலை 1) அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார்.

தொழில்துறைகளில் ஊழியர் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதேவேளையில் ஒப்புதல் அளிக்கப்படும் முறையைச் சீராக்க வெளிநாட்டு ஊழியர் விவகார அமைச்சரவைக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) சந்திப்பு நடத்தியது. அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எஃப்டபிள்யுசிஎம்எஸ்

மாற்றத்தின்கீழ் நிறுவனங்கள் இனி எஃப்டபிள்யுசிஎம்எஸ் (FWCMS) எனப்படும் வெளிநாட்டு ஊழியர் நிர்வாக முறையில் உள்ள இ-குவோட்டா எனும் அம்சத்தின்வழி வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் மின்னிலக்க முறையில் கையாளப்படும்.

“எந்த விண்ணப்பமும் தனிப்பட்ட முறையில் ஆராயப்படாது. அனைத்தும் இந்த முறையில் கையாளப்படும். வேகமாக ஒப்புதல் பெறுவதற்காக அமைச்சர், துணை அமைச்சர் அல்லது அமைச்சின் அதிகாரிகளைச் சந்திக்கவேண்டியதில்லை,” என்று அவர் திங்கட்கிழமை (ஜூலை 6) செய்தியாளர் கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த மின்னிலக்கத் தளம், முழுமையாக மனிதவள அமைச்சின் கட்டுப்பாட்டில் இல்லை எனக் கூறப்படுவதை திரு ரமணன் மறுத்தார். எஃப்டபிள்யுசிஎம்எஸ் முறையின் சோர்ஸ் கோட் எனப்படும் கணினி நிரல் உத்தரவும் அதைக் கையாளும் தலைமை உரிமையும் (source administrator) தமது அமைச்சிடம் இருப்பதாக திரு ரமணன் சுட்டினார்.

ஆகக் கடைசி நிலவரப்படி 548 நிறுவனங்களின் 22,476 விண்ணப்பங்கள் எஃப்டபிள்யுசிஎம்எஸ்ஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாவெளிநாட்டு ஊழியர்அனுமதிஒப்புதல்மனிதவளம்