கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் தலைமையில் ஆசியான் அனைத்துலகச் சவால்களையும் மீறி முன்னேறியுள்ளதாகப் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டிணன்ட் மார்கோஸ் ஜூனியர் பாராட்டியுள்ளார்.
“திரு அன்வார் திட்டமிட்ட பணிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்ற முடிந்தது,” என்று திரு மார்கோஸ் சொன்னார்.
திமோர்-லெஸ்டேயை ஆசியான் அமைப்பின் முழுமையான உறுப்பினராகக் கொண்டுவந்தது அவற்றுள் அடங்கும் என்ற அவர், அனைவரையும் உள்ளடக்கும் குறிக்கோளைக் கொண்டு ஆசியான் அதிக பங்காளி நாடுகளைக் கொண்டிருக்க விரும்புகிறது என்றார்.
47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் அது தொடர்பான இதர சந்திப்புகளிலும் கலந்துகொள்ள திரு மார்கோஸ் கோலாலம்பூர் சென்றார். அந்தக் கூட்டங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) முடிந்தன.
ஆசியான் அமைப்பு வட்டார அமைதி, நிலைத்தன்மை, கூட்டுறவு ஆகியவற்றை நிலையாக வைத்திருக்கும் குறிக்கோள் கொண்ட புதிய நாடுகளுடன் பங்காளித்துவ உறவை உருவாக்க முயலவேண்டும் என்றும் திரு மார்கோஸ் அழைப்பு விடுத்தார்.
பிலிப்பீன்சுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவு உருமாறியுள்ளதைச் சுட்டிய திரு மார்கோஸ், அதற்குத் தலைவர்களிடையே உள்ள நம்பிக்கையும் வெளிப்படையான கலந்துரையாடலும் அவசியம் என்றார்.
மலேசியா அதிகாரபூர்வமாக ஆசியானின் தலைமைத்துவத்தைச் செவ்வாய்க்கிழமை பிலிப்பீன்சிடம் ஒப்படைத்தது.
2026ஆம் ஆண்டில் ஆசியானுக்கு பிலிப்பீன்ஸ் தலைமையேற்கும்.

