சீன, இந்திய வம்சாவளியினருக்கும் மலேசியாவே தாய்நாடு: அசாலினா

சீன, இந்திய வம்சாவளியினருக்கும் மலேசியாவே தாய்நாடு: அசாலினா

2 mins read
9beaf8d5-13aa-4e55-9649-82f71badfb4d
மலேசியச் சட்டம், மலாய்க்காரர்களோடு மலாய்காரர் அல்லாதோரின் உரிமைகளையும் பாதுகாக்கிறது என்று அம்னோ தகவல் தொடர்புப் பிரிவின் தலைவர் அசாலினா கூறியுள்ளார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தில் இனவாதப் பேச்சுகளுக்கு இடமில்லை என்று அம்னோ தகவல் தொடர்புப் பிரிவின் தலைவர் அசாலினா ஒத்மான் சனிக்கிழமையன்று (ஜூலை 25) கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் முஹம்மது சனுசி முகமட் நோரின் கருத்துகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டம், நிறுவன சீர்திருத்தங்களுக்கான பிரதமர் அலுவலக அமைச்சருமான அசாலினா, அரசியல் தலைவர்களும் பிரசாரங்களும், குறிப்பாக இனம், மதம், மன்னர் குடும்பம் தொடர்பான விவகாரங்களைப் பேசும்போது தங்களது வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

“வாக்குகளைப் பெறுவதற்காக இனம், மதம், அரச குடும்பம் சார்ந்த விவகாரங்களை கோபத்தையோ அச்சத்தையோ தூண்டும் கருவிகளாகப் பயன்படுத்தக் கூடாது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“சீனர்களுக்குச் சீனா இருக்கிறது, இந்தியர்களுக்கு இந்தியா இருக்கிறது, கம்போடியர்களுக்குக் கம்போடியா இருக்கிறது. ஆனால் மலாய்க்காரர்களுக்கு மலேசியா மட்டுமே உள்ளது,” என்று கெடா மாநில முதலமைச்சருமான சனுசி கூறிய கருத்தைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு பதில் கூறினார்.

இத்தகைய கருத்துகள், சீனா, இந்திய வம்சாவளி மலேசியர்களுக்கு வேறு தாய்நாடுகள் உள்ளன என்றும் மலாய்க்காரர்கள் மட்டுமே உண்மையிலேயே மலேசியாவிற்கு உரியவர்கள் என்றும் தவறான எண்ணத்தை உருவாக்கக்கூடும் என்று அசாலினா சுட்டிக்காட்டினார்.

“உண்மை என்னவென்றால் மில்லியன்கணக்கான சீனா, இந்திய வம்சாவளி மலேசியர்களுக்கு மலேசியா என்பது ஒரு தற்காலிகத் தங்குமிடம் அல்ல. மலேசியாவே அவர்களின் தாய்நாடு,” என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.

“கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், இஸ்லாமின் நிலை, ஆட்சியாளர்கள், மலாய்க்காரர்கள், பூமிபுத்திரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, இனப்பாகுபாடின்றி ஒவ்வொரு மலேசியக் குடிமகனின் உரிமைகளையும் சட்டப்பூர்வ நிலையை உறுதிசெய்கிறது,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரம், வாக்காளர்களை நேரடியாகப் பாதிக்கும் வாழ்க்கைச் செலவினம், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளதார வளர்ச்சி போன்ற விவகாரங்களிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்று அசாலினா கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
அம்னோமலேசியாதேர்தல்நெகிரி செம்பிலான்பிரசாரம்