பெட்டாலிங் ஜெயா: பிரபல இணைய விற்பனைத் தளங்களில் சட்டவிரோதமாகக் கிடைக்கும் ஒரு புதிய கருவி, விதிமீறும் வாகனவோட்டிகளும் தப்பிச்செல்லும் குற்றவாளிகளும் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் தங்களை ‘மறைத்துக்கொள்ள’ உதவுகிறது.
ஒரு வாகனத்தில் பொருத்தப்படும் இந்தப் பதிவு எண் மாற்றும் கருவியால், ரிமோட் கண்ட்ரோல் மூலம் வாகனத்தின் பதிவு எண்ணை உடனடியாக மறைக்கவோ மாற்றவோ முடியும்.
குறைந்தது மூன்று இணைய விற்பனைத் தளங்களில் இந்தக் கருவி RM150 (S$45) முதல் RM350 வரை விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த விற்பனையாளர்கள், இருவகை கருவிகளை விற்கின்றனர்.
ஓர் இணைய விற்பனைத் தளத்தில் உள்ள விளம்பரக் காணொளியில், ஒரு மாடல், ஓர் உள்ளமைக்கப்பட்ட மோட்டாரைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது அசல் பதிவுத் தகட்டைப் போலியான எண்ணாக மாற்றுகிறது.
மற்றொரு வகை, அசல் தகட்டை முழுவதுமாக மறைக்க ஒரு காலித் தகடு அல்லது மூடியை கீழே இறக்குகிறது.
குறைந்தது 12 இணைய விற்பனையாளர்கள் இக்கருவிகளை விளம்பரப்படுத்துகின்றனர். இவை உலோகம் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆனவை. அனைத்து வானிலையையும் தாங்கும் இக்கருவிகளை 10 நிமிடங்களுக்குள் பொருத்த முடியும்.
ஓர் விளம்பரத்தில், வாகனப் பதிவுத் தகடுகளை வானிலை அல்லது மோசமான சாலைகளிலிருந்து ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க ஒரு வழியாக இந்தக் கருவி விளம்பரப்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அந்த விளம்பரத்தின் இறுதியில், இக்கருவி உடல் ரீதியில் தற்காப்பை வழங்குவதோடு, ‘மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பையும் தனியுரிமையையும்’ வழங்குகிறது என்று விற்பனையாளர் குறிப்பிடுகிறார்.
மற்றோர் இணைய விற்பனைத் தளத்தில், இக்கருவி ‘அபராதங்களைத் தவிர்க்க உதவும் தகடு உறைகள்’ என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.
வாகனங்களில் இத்தகைய கருவிகள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், வாகனவோட்டிகள் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்தியப் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறை இயக்குநர் முகம்மது யுஸ்ரி ஹசன் பஸ்ரி எச்சரித்துள்ளார்.
ஒரு வாகனத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட எண்ணைத் தவிர வேறு பதிவு எண்ணைப் பயன்படுத்துவது குற்றமாகும் என்றார் அவர்.
“இத்தகைய கருவி பொருத்தப்பட்ட எந்தவொரு வாகனத்தையும் நாங்கள் பறிமுதல் செய்வோம். மேலும், வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும்.
“இக்கருவியை வாகனத்தில் பொருத்தியுள்ளவர்களை அடையாளம் காண நாங்கள் அமலாக்கத்தை தீவிரப்படுத்துவோம்,” என்று தி ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் திரு யுஸ்ரி கூறினார்.
இத்தகைய கருவிகளின் விற்பனை குறித்து உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவினம், மின்னிலக்க அமைச்சுகளுடன் காவல்துறை கலந்தாலோசிக்கும் என்றும் அவர் சொன்னார்.