கோலாலம்பூர்: மலேசியா இவ்வாண்டுக்கான தனது பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை உயர்த்தி உள்ளது.
வலுவான உள்நாட்டுத் தேவைகளும் முதலீடுகளும் வளர்ச்சிக்கு உதவும் என மலேசிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அந்த வளர்ச்சி மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைச் சமாளிக்க உதவும் என்று அது கருதுகிறது.
மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகரா மலேசியா (BNM) செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) தனது வருடாந்திரப் பொருளியல் ஆய்வறிக்கையை வெளியிட்டது.
இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சி 4 விழுக்காட்டுக்கும் 5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட அளவில் விரிவடையும் என்று வங்கி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது, இதற்கு முன்னர் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் சற்று அதிகம். பொருளியல் வளர்ச்சி 4 விழுக்காட்டுக்கும் 4.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் எனக் கடந்த அக்டோபர் மாதம் அரசாங்கம் முன்னுரைத்து இருந்தது.
தற்போதைய வெளிப்புறச் சூழல் தடுமாற்றங்களைச் சமாளிக்கும் அளவுக்கு, மலேசியாவின் உள்நாட்டு மீள்திறனும் பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதிக் கட்டமைப்பும் வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் தெரிவித்துள்ளார்.
மீள்திறன் மிக்க ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா, கடந்த ஆண்டு தனது சொந்தப் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பையும் முறியடித்துச் சாதித்தது. அமெரிக்க வரிகளால் ஏற்பட்ட சவால்களைக் கடந்து அந்த வளர்ச்சியை அது எட்டியது.
2025ஆம் ஆண்டில் சாதனை அளவாக முதலீடுகளைக் கவர்ந்து இழுத்ததன் எதிரொலியாகப் பொருளியல் வளர்ச்சி 5.2 விழுக்காடு எனப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதிகளும் வலுவான பயணத்துறையும் கைகொடுக்கும் என்பது மத்திய வங்கியின் நம்பிக்கை.
ஈரான் போர் காரணமாக ஏற்படும் அபாயங்கள் தணிவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், அத்தகைய அபாயங்களிலிருந்து பொருளியலைப் பாதுகாக்க நிகர எரிசக்தி ஏற்றுமதியாளர் என்னும் தகுதிநிலையும் மலேசியாவுக்குக் கைகொடுக்கும் என வங்கி எதிர்பார்க்கிறது.

