கோலாலம்பூர்: மலேசியாவில் டீசல் மானியச் சீரமைப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுவந்த 200 ரிங்கிட் நிதியுதவியானது 300 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை உயர்வானது மார்ச் 17ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
உலகளவில் எரிபொருள் விலைகள் கூடிவருவதால் டீசலைப் பயன்படுத்துவோர்க்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையைத் தணிக்கும் நோக்குடன் இந்த உதவித்தொகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 80 காசு உயர்ந்து, 5.52 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. சாபா, சரவாக், லபுவான் பகுதிகளில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை டீசல் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற அளவிலேயே இருக்கும்.
இதனிடையே, ரோன்97 பெட்ரோல் விலை 60 காசு உயர்த்தப்பட்டு, லிட்டர் 5.15 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் என்று நிதியமைச்சு புதன்கிழமை (மார்ச் 25) தெரிவித்தது. இதே காலகட்டத்தில், மானியமில்லா ரோன்95 பெட்ரோலின் விலையும் லிட்டருக்கு 60 காசு உயர்ந்து, 3.87 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.
புடி95 திட்டத்தின்கீழ் மானிய விலையில் விற்கப்படும் ரோன்95 பெட்ரோல் விலை 1.99 ரிங்கிட் என அதே விலையிலேயே நீடிக்கிறது.

