கோலாலம்பூர்: மலேசியாவின் பணவீக்க விகிதம் ஆண்டு அடிப்படையில் கடந்த மே மாதம் 2 விழுக்காட்டுக்குக் கூடியது.
அதிகரித்துள்ள பயனீட்டுக் கட்டணங்கள், வெளியில் உணவருந்தும் செலவுகள் அதிகரித்தது உள்ளிட்டவை அதற்குக் காரணங்கள் என்று மலேசியப் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஏப்ரல் மாதம் பதிவான 1.8 விழுக்காடு பணவீக்க விகிதத்தையும் அது மிஞ்சிவிட்டது.
மலேசியாவின் பணவீக்க விகிதம், கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு 1.8 விழுக்காடாக இருந்துள்ளது.
இதற்கிடையே, முக்கியப் பணவீக்க விகிதம் மே மாதத்தில் 1.9 விழுக்காடு கூடியது.
மே மாதத்தில் பயனீட்டாளர் விலைக் குறியீட்டில் உள்ள 573 பொருள்களில் 331க்கான விலைகள் ஏறியதை அறிக்கை குறிப்பிட்டது.
உணவு, பான விலை கடந்த மே மாதம், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க 1.8 விழுக்காடு அதிகரித்தது.
வீடு, தண்ணீர், மின்சாரம், எரிவாயு, மற்ற எரிபொருள் ஆகியவற்றுக்கான விலைகள், மே மாதத்தில் 3.2 விழுக்காடு கூடின.
தொடர்புடைய செய்திகள்
உணவக, தங்குமிடச் சேவைகளும் 3.2 விழுக்காடு உயர்ந்தன.
இந்நிலையில், தென்கொரியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள பணவீக்கத்தைக் காட்டிலும், மலேசியாவில் பதிவான பணவீக்க விகிதம் குறைவாக இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

