புத்ராஜெயா: மலேசியாவும் ஜப்பானும் கல்வித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இருதரப்பு உறவுகளை விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவம் என்ற நிலைக்கு உயர்த்த இணக்கம் கண்டுள்ளன.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவும் ஜனவரி 10ஆம் தேதி புத்ராஜெயாவில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
பல்வேறு கல்வித் திட்டங்கள் குறித்து அவர்கள் கலந்துபேசினர். ஜப்பானின் சுகுபா பல்கலைக்கழகக் கிளையை மலேசியாவில் அமைப்பதும் அவற்றில் அடங்கும்.
மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மலாக்கா (UTeM), வாசெடா பல்கலைக்கழகம், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UTM), ஜப்பான் அனைத்துலகத் தொழில்நுட்பக் கழகம் (JIIT) போன்றவற்றுக்கு இடையிலான பங்காளித்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஜப்பானின் கீயோ பல்கலைக்கழகம் முக்கியமான ஒன்றாகும் என்று கூறிய திரு அன்வார், எனவே அந்தப் பல்கலைக்கழகம் தமது கல்வித் திட்டங்கள் சிலவற்றில் பங்குபெறுவதை உறுதிசெய்யும்படி ஜப்பானியப் பிரதமரிடம் தாம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.
இந்தக் கல்வித் திட்டங்கள், மலேசியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் பெரிய அளவிலான முயற்சியில் ஓர் அங்கம் என்று கூறப்பட்டது.
வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத எரிசக்தி ஆகியவை தொடர்பான ஒத்துழைப்பு மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு அன்வார், திரு இஷிபா ஜப்பானின் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பதைச் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
திரு இஷிபா மலேசியாவை முக்கியப் பங்காளித்துவ நாடாகக் கருதுகிறார் என்றார் அவர்.
இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள ஜப்பானியப் பிரதமருக்கு ஜனவரி 10ஆம் தேதி காலை பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பான் மலேசியாவின் முக்கியப் பொருளியல் பங்காளித்துவ நாடாக விளங்குகிறது. 2024ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மலேசியாவில் ஜப்பானியப் பங்காளித்துவத்துடன் மொத்தம் 2,821 உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் மொத்தம் 105.2 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட 344,996 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

