மலேசியா ஜூலை 1ஆம் தேதி முதல் கோழி ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.
சந்தை நிலைக்கு ஏற்ப கோழி, கோழி முட்டைகளுக்கான விலைகளை நிர்ணயிக்கும் முறையும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டின் வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் சாபூ தெரிவித்தார்.
ஏற்றுமதி தடையை நீக்குவதன் மூலம் கோழி வளர்ப்பில் உள்ள விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டுவார்கள், நாட்டிற்குள் பண சுழற்சியும் ஏற்படும் என்றார் அவர்.
கோழிப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ஜூன் 30க்கு பின் இருக்காது என்று அமைச்சர் சாபூ குறுப்பிட்டார்.
நாட்டில் போதுமான அளவில் கோழி, கோழி முட்டைகள் இருப்பதை உறுதி செய்ய புதிய விதிமுறைகளும் நடப்புக்கு வரும் என்றார் அவர்.
பிரேசில், சீனா, டென்மார்க், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் கோழி முட்டைகளை தாய்லாந்து, உக்ரேனில் இருந்து மட்டும் தான் இறக்குமதி செய்ய மலேசிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு மலேசியாவில் உள்நாட்டு அளவில் கோழி, கோழி முட்டைகளுக்கு தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஏற்படும் சூழல் வரக்கூடும் என்பதால் மலேசியா கோழி ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.