கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) காலை கோலாகலமாகத் தொடங்கியது.
இந்தக் கொண்டாட்டத்தில் மலேசியாவின் முக்கிய சுற்றுலாத் தளங்களை வெளிப்படுத்திய வண்ணமயமான அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன.
தேசிய, இயற்கை பாரம்பரியமும் இதில் பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டன என்று த ஸ்டார் தகவல் தெரிவித்தது.
அலங்கார ஊர்திகளில் மலேசிய மழைக்காடுகளின் மறுவடிவமைப்புகளும், கொடிகளுக்கு இடையே வீற்றிருக்கும் மலேசிய தேசியப் பறவையான ‘ஹோர்ன்பில்’ உருவமும் இடம்பெற்றிருந்தன.
ஊர்திகள் கினாபாலு மலை போன்ற மலேசியாவின் மிகவும் பிரபலமான இயற்கை சுற்றுலாத் தலங்கள் பலவற்றையும் வெளிப்படுத்தின.
‘விசிட் மலேசியா 2026’ பிரசாரத்தின் அதிகாரபூர்வ சின்னங்களான விரா, மன்ஜா ஆகியவையும் பெரிய ஊர்தி ஒன்றில் இருந்து பொதுமக்களை நோக்கி கையசைத்துக் கொண்டே சென்றது.
இது மக்களிடையே பெரும் ஆரவாரத்தை எழுப்பியது.
முன்னதாக முக்கிய விருந்தினர்களான மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், மலேசிய அரசி ராஜா ஸரித் சோஃபியா ஆகியோரின் வருகையைத் தொடர்ந்து, 2026 தேசிய தினக் கொண்டாட்ட அணிவகுப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
காலை 8 மணிக்கு வருகையளித்த மன்னர் தம்பதியரை பிரதமர் அன்வார் இப்ராகிம் வரவேற்றார்.
மன்னர் தம்பதியர் அரச மரியாதையுடனும் தேசிய கீதத்துடனும் வரவேற்கப்பட்டனர்.
அதன் பின்னர் சுல்தான் இப்ராகிம் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
சுங்கை பெசி பெர்டானா முகாமைச் சேர்ந்த முதலாவது அரச மலாய் படைப்பிரிவின் நான்கு அதிகாரிகள், 103 வீரர்களைக் கொண்ட முதன்மை அணிவகுப்புப் படையினரிடமிருந்து அரச மரியாதையை மாமன்னர் பெற்றுக்கொண்டார்
புத்ராஜெயா வான்வெளியில் ஜாலூர் கெமிலாங் (தேசியக் கொடி), ஆயுதப்படைகள், ராணுவம், மலேசிய கடற்படை, மலேசிய விமானப்படை ஆகியவற்றின் கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்ட ஐந்து ஹெலிகாப்டர்களின் வான்வழி சாகசம் இடம்பெற்றது.
41வது அரச பீரங்கிப் படைப்பிரிவினரின் 14 குண்டுகள் முழங்க, ஜாலூர் கெமிலாங் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் மீண்டும் இசைக்கப்பட்டது.
தீயணைப்பு, மீட்புத் துறையின் துணை ஆணையர் அப்துல் ரசாக் மூடா தலைமையில், தீயணைப்பு, மீட்புத் துறையின் 69 பணியாளர்களுடன் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் நூர் அலியா நடாஷாவும் இணைந்து உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தேசிய தினக் கொண்டாட்டத்தின் பல அங்கங்கள் தொடர்ந்தன.


